

விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சென்னை படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்குள்ள காற்று மாசைத் தாண்டி படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் விஜய்யுடன் நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி (நடிகர் வைபவ் சகோதரர்) என பலரும் ஒப்பந்தமாகி டெல்லி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.
இவர்களுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரம்யாவும் 'தளபதி 64' படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அவர் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அதனை முடித்து சென்னையில் தொடங்கவுள்ள படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது படங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ரம்யா. 'ஓ காதல் கண்மணி' படத்தில் தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியாகி பலரது கவனம் ஈர்த்த 'ஆடை' படத்தில் அமலாபாலுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்குவது தொடங்கும் எனத் தெரிகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.