

தனது சிறு வயது படங்களை வைத்து மீம்ஸ் உருவாக்கியவர்களைச் சாடியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
சமீபமாக இணையத்தில் நடிகர்களைக் கிண்டல் செய்வதும், திட்டுவதும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இயக்குநர் சேரன் கூட இது தொடர்பாகத் தனது ஆதங்கத்தை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது இதே போன்றதொரு பிரச்சினையைச் சந்தித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர், தமிழில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார். தனது சிறுவயது புகைப்படங்களை வைத்து மீம் ஒன்றைத் தயார் செய்தவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா, "இதைச் செய்வதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. எங்களைத்தான் எளிதில் இலக்காக்க முடியும் என்பதாலா? பிரபலம் என்பதாலேயே இரக்கமின்றி எங்களை இலக்காக்க முடியாது. பலரும் மோசமான கருத்துகளை, கிண்டல்களை நிராகரித்துவிடுங்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். நானும் செய்கிறேன்.
எங்கள் வேலையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எங்கள் குடும்பம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எந்த நடிகரும் இந்த மோசமான விஷயத்துக்கு உரியவர் அல்ல. ஏனென்றால் ஒரு விஷயம் தெரிந்துகொள்ளுங்கள். நடிகராக இருப்பது எளிதல்ல.
ஒவ்வொரு தொழிலுக்கும் நாம் அதிக மரியாதை தர வேண்டும். முதலில் சக மனிதரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன். யார் இதைச் செய்திருந்தாலும் அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் என்னைக் காயப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு அந்தத் திறன் இருக்குமென நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து நடக்கப்போகும் விஷயங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இதுவரை ராஷ்மிகா மந்தனா இந்த அளவுக்குக் கடுமையாகப் பேசியதில்லை என்பதால், இவரது இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.