

’’ரஜினிக்கும் எனக்கும் ரகசிய ஒப்பந்தம் உண்டு. ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மரியாதையுடன் நடந்துவருகிறோம்’’ என்று பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கமல் பேசினார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா இன்று (8.11.19) வெள்ளிக்கிழமை சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. அத்துடன், அலுவலகத்தில், இயக்குநர் கே.பாலசந்தரின் மார்பளவு சிலை திறப்பு விழாவும் நடைபெற்றது. கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இணைந்து சிலையைத் திறந்து வைத்தனர்.
விழாவில், கமல் பேசியதாவது:
திரைப்படத்துறையில் ரஜினிகாந்தும் என்னைப்போலவே நிறைய சிரமங்களை எதிர்கொண்டவர். சினிமாவில் அவர் பாணி வேறு. என் பாணி வேறு. நடனத்தில் இரண்டுவிதமான அம்சங்கள் இருக்குமே அதுமாதிரிதான். ரஜினிக்கு இந்திய அரசு ஐகான் விருது அளித்து கவுரவித்திருப்பது தக்க மனிதருக்கு விருது என நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். ரஜினி சினிமாவுக்கு வந்த முதல் வருடத்திலேயே ஐகான் ஆகிவிட்டார். அப்படிப் பார்த்தால் இந்த விருது தாமதமாகத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் வழங்கியதற்கு நன்றி.
நாங்கள் இருவரும் இளைஞர்களாக இருந்தகாலகட்டத்திலேயே தெளிவாக இருந்து வேறு வேறு பாதையை பிரித்துக்கொண்டோம். ஏவி.எம் நிறுவனத்தின் வேப்பமரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்ட அன்றைய அந்த இரு இளைஞர்களின் மனநிலை இன்றைக்கு வருமா எனத் தெரியவில்லை. அன்று அப்படி ஒரு முடிவெடுத்தபோது எங்களைச் சுற்றி யாரும் இல்லை. ஒருவேளை யாராவது எங்களுடைய பேச்சை, காது கொடுத்துக் கேட்டிருந்தால் அது வேறுமாதிரி ஆகியிருக்கும். எங்களை கர்வி என்று கூட சொல்லியிருப்பார்கள்.
அன்று எடுத்துக்கொண்ட அந்த ஒப்பந்தம் நாங்களே எங்களுக்கு மரியாதை கொடுத்துக்கொண்டமாதிரிதான் ஆனது. எதிர்காலம் நல்ல வாழ்க்கையைக் கொடுக்க தயாராக இருக்கிறது. அதை நாம் இருவரும் சரியாக உபயோகிக்க வேண்டும் என ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டோம். எங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். எங்களின் முதல் ரசிகனும், விமர்சகரும் நாங்கள்தான்.
இயக்குநர் பாலசந்தர் இன்று இருந்திருந்தால் இந்த மேடையில் இருந்திருப்பார். அப்படி இல்லாததால் இந்த ராஜ்கமல் அலுவலகத்தின் முகப்பில் சிலையாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய முதல் படத்தை பார்த்துவிட்டு, ‘இவ்வளவு தெளிவாக ஒரு படத்தை இயக்க ஒருவர் வந்திருக்கிறாரே!’ என வியந்திருக்கிறேன். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படத்தின் பெயரை முதன் முதலில் என்னிடம் ரஜினி சொல்லும்போது என் காதில், ‘கணபதி’ என விழுந்தது. தலைப்பைச் சொல்லிவிட்டு, ‘எப்படி?’என்று கேட்டார். ‘விநாயகர் சதுர்த்தி.. மாதிரி இருக்கே!’என்று சொன்னேன். ‘ஏன்.. ஏன்.. தளபதி பிடிக்கலையா?’ என்று கேட்டார். அப்போதுதான் புரிந்தது. ‘தலைப்பு தளபதியா? ஓ.. அருமையான தலைப்பு!’ என்றேன்.
இப்படி எங்களுக்குள் நடக்கும் உரையாடல்களை கவனித்தால் ரொம்பவே வேடிக்கையாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கை ரொம்பவே எதார்த்தமானது. ஆனாலும், எங்கள் ரசிகர்கள் சண்டைப் போட்டுக்கொள்வார்கள். விளையாட்டு மைதானம் என்றால் இரண்டு கோல் போஸ்ட் இருக்கத்தானே வேண்டும். அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும். திடீரென இந்த ஆள் ஒருமுறை ‘விட்டுட்டு போயிடலாம்னு இருக்கேன்!’ என்று என்னிடம் யோசனை கேட்டார். எப்படி விட முடியும். அப்புறம் என்னையும் சேர்த்து வீட்டுக்குப் போக சொல்லிடுவாங்க.
நம்ம ரெண்டு பேரையும் வைத்து இங்கே விளையாடுறாங்க. திடீர்னு ஒரு ஆள் மட்டும் வெளியில போறேன்னு சொன்னா எப்படி? என்று சொல்லி இருக்கவைத்தேன். எனவே, ரஜினி எத்தனை வெற்றிப் படங்கள் கொடுத்தாரோ அதில் எனக்கும் பங்குண்டு. அந்த அளவுக்கு நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்திருக்கிறோம். எங்களின் பயணம் அற்புதமான பயணம். சினிமாவில் பொறாமை, கோபம், அவமரியாதை நிறைய வரும். அதெல்லாம் மீறி நானும், ரஜினியும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் இருவரில் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்வதற்கு முன்பு அந்த விஷயம் எங்களுக்கு வந்துவிடுவதால் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
இவ்வாறு கமல் பேசினார்.