

வி.ராம்ஜி
‘பொல்லாதவன்’ டைட்டிலை உங்கள் மாமனாரிடம் கேளுங்கள்’’ என்று தனுஷிடம் முக்தா சீனிவாசன் தெரிவித்தார் என்று அவரின் மகன் முக்தா ரவி தெரிவித்தார்.
முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியான படம் ‘பொல்லாதவன்.’ இந்தப் படம் 1980-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளியன்று வெளியானது. இந்தப் படத்தில், ரஜினி, ஸ்ரீப்ரியா, லட்சுமி, சிவசந்திரன், சுருளிராஜன், டெல்லிகணேஷ் முதலானோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். படத்துக்கு முதலில், ‘எரிமலை’ எனப் பெயரிடப்பட்டது. பிறகு ‘பொல்லாதவன்’ என வைக்கப்பட்டது. இந்தத் தலைப்பை ரஜினிதான் சொன்னார் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் முக்தா ரவி.
பின்னர், வெற்றிமாறனின் முதல் படமாக, தனுஷ் நடிப்பில் வெளியானது ‘பொல்லாதவன்’. ரஜினி நடித்த படத்துக்கும் தனுஷ் நடித்த இந்தப் படத்துக்கும் உள்ள ஒற்றுமை தலைப்புதான்.
80-ம் ஆண்டு ரஜினியின் படம் வெளியானது. பிறகு 27 வருடங்களுக்குப் பிறகு அதே தலைப்பில் தனுஷ் நடித்த படம் வெளியானது. ’பொல்லாதவன்’ தலைப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி கேட்டு தனுஷ், இயக்குநர் முக்தா சீனிவாசனை சந்தித்துக் கேட்டார். அதைக் கேட்டுவிட்டு, ‘பொல்லாதவன்’ தலைப்பு வைத்ததே உங்கள் மாமனார் ரஜினிதான். அதனால் அவரிடம் கேட்டாலே போதும் என்று சொன்னார் முக்தா சீனிவாசன்.
‘படத்தின் டைட்டிலைப் பயன்படுத்திக் கொள்வதற்கு, இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை வாங்குவார்கள். ஆனால், ரஜினி சார் நடித்த ‘பொல்லாதவன்’ டைட்டிலை அவரின் மருமகனான தனுஷ் கேட்டபோது, பணமே வாங்கிக் கொள்ளாமல், ’பொல்லாதவன்’ டைட்டில் வழங்கப்பட்டது’ என்று முக்தா ரவி தெரிவித்தார். அதேபோல், ‘பொல்லாதவன்’ குறித்த இன்னொரு சம்பவத்தையும் சொன்னார் முக்தா ரவி.
‘’’பொல்லாதவன்’ படத்துக்கு ஒளிப்பதிவு மேதை கர்ணன் தான் கேமிராமேன். ஒளிப்பதிவிலும் கேமிரா கோணத்திலும் அசாத்தியம் பண்ணுவார் அவர். கர்ணனின் திறமையைக் கண்டு அப்பா வியந்து சொல்லிக்கொண்டே இருப்பார். ஒருமுறை, ஏரியில் படப்பிடிப்பு. அதைப் படமாக்க வித்தியாசமான கோணத்தைத் தேடினார் கர்ணன். அப்போது அவரின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலி ஏரிக்குள் விழுந்துவிட்டது. இதைத் தெரிந்து கொண்ட ரஜினி, மறுநாள் கர்ணனுக்கு ஒன்றரை பவுன் சங்கிலியை வாங்கிக் கொடுக்க முன்வந்தார்.
ஆனால் அப்பாவோ, ‘முக்தா கம்பெனிக்கு வேலை செய்துவிட்டு யாருக்கும் எந்த நஷ்டமும் வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால், நாங்கள் ஏற்பதுதான் சரியாக இருக்கும். மன்னித்துக் கொள்ளுங்கள். கர்ணனுக்கு நானே செயின் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். பிறகுதான் ரஜினி சமாதானமானார் என்று முக்தா ரவி தெரிவித்தார்.