

சீமான் நடித்த இரண்டு படங்கள் இன்று (நவம்பர் 8) ரிலீஸாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று (நவம்பர் 8) 53-வது பிறந்த நாள். இயக்குநராக மட்டுமின்றி, தம்பிகளின் அன்புக்காக நடிகராகவும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸாகியுள்ளன.
சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தக் கதையில், பிரதான பாத்திரத்தில் பிரியங்கா நடித்துள்ளார். ஹரிஷ், ‘வழக்கு எண்’ முத்துராமன், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் சுரேஷ் காமாட்சியே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இதில், போலீஸ் அதிகாரியாக சீமான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தடைகளுக்குப் பிறகு இன்று இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது.
ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கியுள்ள படம் ‘தவம்’. இதில், நடேசன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சீமான். வசி, பூஜாஸ்ரீ, போஸ் வெங்கட், சிங்கம்புலி, வெங்கல் ராவ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆஸிப் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
சீமான் பிறந்த நாளான இன்று, அவர் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.