

என் மீது காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவர் சர்ச்சை அற்பத்தனமானது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் ரஜினி பேசினார்.
இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. இதில் ரஜினி - கமல் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார் ரஜினி.
அதில் அவர், "எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அது நடக்காது. பாஜக எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடும் எண்ணமில்லை. பாஜக உறுப்பினராக என்னை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனக்கு சிறப்பு விருது அறிவித்தவர்களுக்கு நன்றி. பாஜகவில் சேரவோ, தலைவராகவோ யாரும் என்னை அணுகவில்லை.
திருவள்ளுவர் நாத்திகர் அல்ல, அவர் ஆத்திகர். அதை யாரும் மறுக்கவே முடியாது. பாஜகவினர் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தைப் போட்டார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அதற்காகவே ஊரிலுள்ள அனைத்து திருவள்ளுவர் சிலைக்கும் பட்டை போட்டு, காவி உடை அணிவிக்கக் கூடாது. மக்களுடைய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கிறது. அதை விட்டுவிட்டு, இதை இவ்வளவு பெரிய சர்ச்சையாக்கி, பெரிய விஷயமாக்கி பேசுவது அற்பத்தமான இருக்கிறது.
ஒரு கட்சி என்றால் யார் வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கலாம். எனக்கும் பாஜக கலரைப் பூச முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள். திருவள்ளுவருக்குப் பூசுவது மாதிரி எனக்கும் முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவரும் மாட்ட மாட்டார். நானும் மாட்ட மாட்டேன்” என்று பேசினார் ரஜினிகாந்த்.