

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலையை கமலும் ரஜினியும் இணைந்து திறந்து வைத்தனர்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேற்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு நேற்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (நவம்பர் 8) சென்னையில் உள்ள புதிய ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் ரஜினி, இயக்குநர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நாசர், சுஹாசினி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கமலுடன் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் பாலசந்தரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதில் ரஜினி - கமல் இணைந்து பாலசந்தரின் மார்பளவு சிலையைத் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசி வருகிறார்கள். விரைவில் ரஜினிகாந்த் சிறப்புரை ஆற்றவுள்ளார்.