

சலூனில் வேலை பார்த்த பணக்கார வீட்டுப் பிள்ளை நான் என்று தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் கமல் தெரிவித்தார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை பரமக்குடியில் அவரது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.
இந்த விழாவில் கமலின் அண்ணன் சாருஹாசன், பிரபு, பூஜா குமார், ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் கமலுடன் கலந்து கொண்டார்கள்.
இதில் கமல்ஹாசன் பேசியதாவது:
''ஒவ்வொரு ஆண்டும் 61 லட்சம் மாணவர்கள் ஆரம்பப் பள்ளிக்குச் செல்கிறார்கள். அது நடுநிலைக்குப் பள்ளிக்கு வரும் போது 58 லட்சமாகக் குறைகிறது. 10-ம் வகுப்புக்குப் போகும்போது 11 லட்சமாகக் குறைகிறது. கல்லூரிப் படிப்புக்கு எத்தனை பேர் போகிறார்கள் என்று பார்த்தால் வெறும் 3 லட்சம் பேர் தான். பாக்கியிருப்பவர்களின் கதி எல்லாம் என்ன? அவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. அதற்காகத் தான் இந்தத் திறனாய்வு மையம். வேலை வாய்ப்பைத் தேடி புலம் பெயர்ந்து செல்லக்கூடாது என்பது தான் எங்களுடைய எண்ணம். திறமை வளர்ப்பு பஞ்சாயத்தாக இது மாற வேண்டும் என்பது தான் என் ஆசை.
பணக்கார வீட்டுப் பிள்ளை விளையாடிப் பார்க்கிறார் என்று நினைப்பார்கள். சலூனில் வேலை பார்த்திருக்கிறேன். அந்த மூன்றரை மாதங்களில் கிடைத்த பாடம் எனக்கு வேறு வழிகளில் உதவியாக இருந்தது. எந்தத் தொழிலுமே நமக்குக் கீழானதில்லை என்பதைப் புரிந்து கொண்டால் நம் வாழ்க்கைத் தரம் முன்னேறும். திறமையுள்ளவர்கள் வெறும் திறமையான தொழிலாளர்களாக மட்டுமில்லாமல் தொழில் விற்பன்னர்களாகி வேலை வாய்ப்பைத் தரும் முதலாளிகளாகவும் மாற முடியும் என்பதற்கான சான்று பல ஊர்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சத்தியாகிரகப் போராட்டத்துக்குப் பிறகு இந்தியா முழுவீச்சில் செயல்பட வேண்டிய போராட்டம் இந்த திறமை வளர்ப்புப் போராட்டம் தான். அதில் தமிழகம் இன்னும் முழுமையாகப் பங்கு பெறாமல் இருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிந்த உண்மை. மற்ற மாநிலங்களில் எல்லாம் செயல் வடிவத்துக்கு வந்து நடந்து கொண்டிருக்கிறது. பல தொழில்கள் கற்க ஆளில்லாமல் இருக்கிறது. பல தொழில்கள் நமக்குத் தேவையாகவும் இருக்கிறது. அதற்கு நிறைய சம்பளமும் கிடைக்கிறது.
பொறியாளருக்குப் படித்து 36 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெரியது என்று நினைத்தால் பெரியதுதான். ஆனால், நகரத்தில் நல்ல முடி திருத்தும் தொழிலாளிக்கு 1 லட்ச ரூபாய் கிடைக்கும். பட்டாளத்தில் சேர்க்கலாம் என்று சொல்லும்போது. அங்கு போய் செத்துவிடவா எனத் திட்டும் தாய்மார்களைப் பார்த்திருக்கிறேன். இன்று சாலை விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையை எடுத்துப் பார்த்தால் அது பட்டாளத்துக்குச் சென்று போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட 100 மடங்கு அதிகம். இந்த தைரியத்தைப் பெற்றோர்களுக்குக் கொடுக்கக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
இந்தத் திறன் மேம்பாட்டு மையம் தானம் அல்ல பரிசு. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கு அனைத்தையும் இலவசமாகக் கொடுத்துக் கொடுத்து கெடுத்துவிட்டார்கள். இலவசமாகக் கொடுத்த கிரைண்டர் ரிப்பேராகிவிட்டது என்றால், அதைச் சரி செய்ய ஆள் இங்கிருந்து வருவான். இலவசத்தை வாங்காதே என்றால் திட்டுவார்கள். கிடைப்பதை ஏன் தடுக்கிறாய் என்பார்கள்''.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.