

சினிமா என்னும் துறவைத் துரத்தி சிறகு செதுக்கிய பறவை என்று கமலுக்கு ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 60-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு இன்று காலை பரமக்குடியில் அவரது தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தார்.
கமலின் 60-வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். மேலும், திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங்கும் கமலுக்குத் தனது ட்விட்டர் பதிவில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல் பிறந்த நாளுக்காக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சினிமா என்னும் துறவைத் துரத்தி சிறகு செதுக்கிய பறவை, உங்கள் அறுபத்து ஐந்து அகவை, எமக்கு விஸ்வரூப உவகை. களிப்புற்றோம் காணீர்! காலம் இருக்கட்டும் உம் பெயர் சொல்லி! கமல்ஹாசன் சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.