

எனக்குக் கிடைத்த பாராட்டுக்களுக்குக் காரணம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என்று 'கைதி' வில்லன் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டதால், இதர மொழியில் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே, 'கைதி' படத்தின் வித்தியாசமான குரல் மொழியாலும், நடிப்பாலும் கவனம் ஈர்த்தவர் அர்ஜுன் தாஸ். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், 'துருவ நட்சத்திரம்' படத்தின் டீஸரில் கேட்கப்படும் வில்லனின் குரலும் தன்னுடையது தான் என்றும் பேட்டிகளில் குறிப்பிட்டார் அர்ஜுன் தாஸ். இதனால் அதற்கும் சேர்த்து தற்போது பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தனக்குக் கிடைத்த இந்த வரவேற்பு தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அர்ஜுன் தாஸ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''கடந்த சில வாரங்கள் கனவு போலக் கடந்து விட்டன. ’கைதி’ வெளியான நாள் அன்று ஆவலுடனும், பதட்டத்துடனும் எழுந்தேன், அர்ஜுனாக ஒரு திரையரங்குக்குள் நுழைந்து அன்பு என்ற கதாபாத்திரமாக வெளியே வந்தேன்.
’துருவ நட்சத்திரம்’ படத்தின் முதல் இரண்டு டீஸர்களில் என்னைப் பேச வைத்ததற்கு மிக்க நன்றி கெளதம் மேனன் சார். அதிலிருந்து தான் எல்லாம் ஆரம்பமானது. என்னை நம்பியதற்கு நன்றி எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் விவேக் சார். உங்களது மதிப்புமிக்க தயாரிப்பில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நன்றி கார்த்தி சார். நான் பல நாட்களாக ரசித்து வந்த ஒரு நடிகருக்குப் பக்கத்திலேயே என்னை நடிக்க வைத்ததற்காக இந்தப் படத்தை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.
நீங்கள் பட வெளியீட்டுக்குப் பின் எனக்குக் கொடுத்த அறிவுரையையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன். சத்யன் சார், அன்பறிவ் மாஸ்டர்கள் மற்றும் ஒட்டுமொத்தக் குழு, ஃபிலோ சார், சாம் சார் என்னுடன் நடித்தவர்கள், துணை இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ’கைதி’ படத்தில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் பெரிய நன்றி.
கடைசியாக நன்றி லோகேஷ் சார். நானே என்னை நம்பாதபோது என் மேல் நம்பிக்கை வைத்ததற்கு. எனக்கு வரும் பாராட்டுகள் அனைத்துக்கும் நீங்கள்தான் காரணம். உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிப்பேன் என நம்புகிறேன்.
அன்பாக என்னை வரவேற்றுள்ள ஊடகத்தினருக்கு நன்றி. சமூக ஊடகத்தில் எனக்கு வாழ்த்துச் செய்திகள் அனுப்பிய ஒவ்வொருவருக்கும் நன்றி. எனக்கு வரும் செய்திகள் அனைத்துக்கும் நானே பதில் சொல்வேன். காத்திருங்கள். எதிர்காலத்தில் நல்ல கதாபாத்திரங்கள் மூலம் உங்களுக்கு நல்ல பொழுதுபோக்கைத் தருவேன் என்று நம்புகிறேன். கடைசியாக, எனது கனவுகளை நம்பியதற்கு என் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி''.
இவ்வாறு அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.