'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பில் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன்: விக்ரம்

'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பில் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன்: விக்ரம்
Updated on
1 min read

'ஆதித்ய வர்மா' படப்பிடிப்பில் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன் என்று கேரளாவில் பத்திரிகையாளர் மத்தியில் விக்ரம் தெரிவித்துள்ளார்.

சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கினார். அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்க, நவம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ளது. தன் மகனின் முதல் படம் என்பதால் பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். படக்குழுவினரோடு விக்ரமும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

'ஆதித்ய வர்மா' படத்தின் மலையாளப் பதிப்புக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் ப்ரியா ஆனந்த் மூவரும் கலந்து கொண்டனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் விக்ரம் பேசும்போது, '' 'ஆதித்ய வர்மா' எனக்குப் படம் தயாரிக்கும், இயக்கும் அனுபவத்தைத் தந்தது. சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் நான் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன். துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோவைப் பார்த்துவிட்டு முகேஷ்தான் எங்களை அணுகினார்.

துருவ் வயதில் சிறியவர் என்பதால் என் மனைவிதான் சற்று தீர்மானமின்றி இருந்தார். ஆனால் படத்தைப் பார்த்த பின் அவர் நடிகனாக ஆரம்பிக்க இதுவே சரியான படம் என்று நினைத்தேன். படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனால் தன் மகன் பள்ளிக்கூடப் போட்டியில் மேடையேறும்போது ஒரு தந்தைக்கு எப்படிப் படபடப்பாக இருக்குமோ அப்படி எனக்கு இருக்கிறது'' என்று விக்ரம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in