

மோடிஜியின் பெரிய ரசிகை நான் என்று பாஜகவில் இணைந்துள்ள ஜெயலட்சுமி பேட்டி அளித்துள்ளார்
பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துப் பிரபலமானவர் ஜெயலட்சுமி. வழக்கறிஞரான இவர் படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'வேட்டைக்காரன்', 'பிரிவோம் சந்திப்போம்', 'குற்றம் 23', 'விசாரணை', 'அப்பா', ’முத்துக்கு முத்தாக’, 'கோரிப்பாளையம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'முள்ளும் மலரும்' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பாஜகவில் இணைந்து வரும் வேளையில், ஜெயலட்சுமியும் இன்று (நவம்பர் 6) இணைந்துள்ளார். காலையில் பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தன்னை பாஜகவில் இணைந்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், "திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும்,வழக்கறிஞருமான ஜெயலட்சுமி இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ளக் காரணம் என தெரிவித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்ததிற்கான காரணம் தொடர்பாக ஜெயலட்சுமியிடம் பேசியபோது...
திடீரென்று பாஜகவில் இணைந்ததற்கான காரணம் என்ன?
மொபைல் செயலி மூலமாக பாஜக உறுப்பினராகத்தான் இருக்கிறேன். காலை பொன்.ராதாகிருஷ்ணனைச் சந்திக்க நேரம் கேட்டவுடன் கொடுத்தார். ஆகையால் நேரில் சென்று பாஜக உறுப்பினராக இணைந்து கொண்டேன். பிரதமர் மோடிஜி செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகிறேன். அவருடைய மிகப்பெரிய ரசிகை. திருக்குறளைப் பற்றி பேசுவதும், திருவள்ளுவர் பற்றி பேசுவதும், சீன அதிபரைச் சந்திக்கத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்தது என ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும் போது பெருமையாக இருந்தது. தேசியக் கட்சிகள் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கண்டிப்பாக பாஜகவில் தான் சேர வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அதற்கான நேரம் இப்போது அமைந்துவிட்டது.
பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபடுவீர்களா..
கண்டிப்பாக. பாஜக சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும், அக்கட்சியை வளர்ப்பதற்கு என்னோட பெரிய பங்கு இருக்கும். தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.
திருவள்ளுவர் சார்ந்து அவர் பேசியது ஈர்த்ததிற்கு ஒரு காரணம் என்கிறீர்கள். இப்போது அதை வைத்து ஒரு அரசியல் நடப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்...
திருவள்ளுவரைப் பற்றிப் பேசவே தகுதியில்லாதவர்கள் தான் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சாதி, மதம் உள்ளிட்ட அனைத்துக்குமே அப்பாற்பட்ட ஐகான். பிரமதராக இருப்பதால் மோடிக்கு ஆயிரம் வேலை இருக்கும். தமிழ்நாட்டு மக்களிடம் ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதைப் பற்றி பேசி ஓட்டு வாங்கப் பார்க்கிறார்கள். எதுவுமே இல்லாத விஷயத்தைக் கூட பூதாகரமாக உருவாக்குகிறார்கள். திருவள்ளுவர் சிலையை அசிங்கப்படுத்தியதைத் தாண்டி மோடிஜி அவரைப் பற்றிப் பேசுகிறார் என்பதைத் தான் பிரச்சினையாகப் பார்க்கிறார்கள். திருவள்ளுவர் அனைவருக்குமே பொதுவானவர். தமிழ்நாடு, திருவள்ளுவர், திருக்குறள் ஆகியவற்றைப் பற்றி உலக நாடுகள் தெரிந்து கொண்டார்கள் என்றால் அதற்கு மோடிஜி தான் காரணம். தமிழ்நாட்டுக்கு நிறைய முதலீடுகள் எல்லாம் கிடைக்கிறது. ஆகையால் நாம் இதற்கு மேலும் பாஜகவை ஆதரிக்க வேண்டும். இந்தியாவில் நிறைய மாநிலங்களில் பாஜகதான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 39 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ந்திருக்கிறது என்றால் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் #GoBackModi ட்ரெண்டாகிறது. இதை யார் செய்கிறார்கள் என நினைக்கிறீர்கள்?
இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை. நமக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது, தப்பான விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். தவறான செய்திகளையும் ட்ரெண்ட்களையும் பரப்ப முயற்சிப்பார்கள். அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. பாசிட்டிவான விஷயங்களைப் பற்றிப் பேசுவோமே. 16 நாடுகள் இணையும் பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல் வந்திருக்கார். அது எவ்வளவு பெரிய விஷயம். இந்தியா மட்டுமே கையெழுத்துப் போடவில்லை. இப்போது சீனா இந்தியாவுக்காக என்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமோ, பண்ணலாம் எனச் சொல்லியிருப்பதாகப் பார்த்தேன். இவ்வளவு நாட்கள் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மட்டுமே நடந்துள்ளது. பாஜக ஆட்சியில் இதுவரை வந்த வளர்ச்சியை விட இனிமேலும் வளர்ச்சி மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டிலும் பாஜக பெரிய கட்சியாக வளரும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ பண்ணுவேன்.
திரைத்துறையில் இருக்கிறீர்கள். வேறு யாரெல்லாம் பாஜகவில் இணையவுள்ளார்கள்?
அவர்களிடம் சேருங்கள் என்று பேசிச் சேர்ப்பது பெரிய விஷயமல்ல. என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் பலரும் திராவிடக் கட்சிகளில் இருப்பவர்கள்தான். அவர்களுடைய சிந்தனைகள் தொடர்பாகத்தான் பேசுவார்கள். எனக்குச் சரி என்று தோன்றியதால் பாஜகவில் இணைந்தேன்.