

துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் 'ஆதித்ய வர்மா' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. நவம்பர் 21-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதனைத் தொடர்ந்து அதன் தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டது. ’வர்மா’ என்ற பெயரில் உருவான ரீமேக்கை பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், இறுதி வடிவம் திருப்தி தராததால் படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது படக்குழு.
இதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கத்தில் மீண்டும் ரீமேக் தொடங்கப்பட்டது. 'ஆதித்ய வர்மா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் துருவ் விக்ரம், பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வந்தன.
நவம்பர் 8-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நாட்கள் நெருங்க 'நவம்பர் வெளியீடு' என்றே விளம்பரப்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது நவம்பர் 21-ம் தேதி தான் 'ஆதித்ய வர்மா' வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி:
இதற்குக் காரணம் என்னவென்று விசாரித்த போது, தணிக்கையில் சிக்கல் எனத் தெரிவித்தனர். மது அருந்துவது, போதை மருந்து உபயோகிப்பது என நிறைய காட்சிகள் இருப்பதால் படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். நாயகனாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் என்பதால் 'ஏ' சான்றிதழ் சரியாக இருக்காது. யு/ஏ சான்றிதழ் கிடைத்தால் சரியாக இருக்கும் எனப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தணிக்கை அதிகாரிகளோ படத்தின் கதைக்களமே 'ஏ' சான்றிதழுக்கான களம்தான் என்று உறுதியாகக் கூறிவிட்டது.
தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி', இந்தியில் வெளியான 'கபீர் சிங்' ஆகிய படங்களுமே 'ஏ' சான்றிதழ் படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்தில் 'ஏ' சான்றிதழ் படங்கள் என்றாலே தவறான கண்ணோட்டம் இருப்பதால் தான் 'யு/ஏ' சான்றிதழுக்கு படக்குழு முயற்சி மேற்கொண்டது.