’’என் அன்பு மனைவி ஷோபா...’’ - ‘மூடுபனி’யில் பாலுமகேந்திரா உருக்கம்
வி.ராம்ஜி
’என் அன்பு மனைவி அம்மு என்கிற ஷோபாவுக்கு’ என்று ‘மூடுபனி’ படத்தின் டைட்டிலில், உருக்கத்துடன் பதிவிட்டிருப்பார் பாலுமகேந்திரா. இன்று ‘மூடுபனி’ ரிலீசான நாள்.
பாலுமகேந்திராவின் முதல் படம் ‘கோகிலா’. இது கன்னடப்படம். இந்தப் படத்தின் ஹீரோ கமல்ஹாசன். இதில் ஷோபா, ரோஜாரமணி, மோகன் முதலானோர் நடித்திருந்தனர்.
இதையடுத்து, தமிழில் முதன்முதலாக படம் இயக்கினார் பாலுமகேந்திரா. அந்தப் படம் ‘அழியாத கோலங்கள்’. இதற்கு முன்னதாகவே, பாலசந்தர் மூலம் ‘நிழல்கள் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமானார் ஷோபா. அதைத் தொடர்ந்து ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’, ’ஒரு வீடு ஒரு உலகம்’, ’முள்ளும் மலரும்’, ’வீட்டுக்கு வீடு வாசப்படி’ என பல படங்களில் நடித்தார்.
இயக்குநர் துரையின் இயக்கத்தில் ‘பசி’ படத்தில் ஷோபாவின் நடிப்பு, மொத்த தமிழ் உலகையும் மிரட்டியெடுத்தது. மத்திய அரசின் உயர்ந்த விருதான ‘ஊர்வசி’ விருது இவருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து ‘ஏணிப்படிகள்’, ‘அகல்விளக்கு’ என பல படங்களில் நடித்து வந்தார்.
’சக்களத்தி’, ‘வேலி தாண்டிய வெள்ளாடு’ என படங்கள் வந்துகொண்டிருந்தபோதுதான், ‘பாலுமகேந்திரா - ஷோபா’ உறவு குறித்து பரவலாகப் பேசப்பட்டது. 1980-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி, ஷோபா மரணமடைந்தார் எனும் செய்தி, தமிழகம் முழுவதும் பரவியது. ‘ஷோபா இறந்துவிட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்துவிட்டார்களா?’ என்றெல்லாம் ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
மே 1-ம் தேதி ஷோபாவின் மறைவுக்குப் பிறகு, ஜூலை 4-ம் தேதி சரத்பாபுவுடன் நடித்த ‘பொன்னகரம்’ வெளியானது. இந்தப் படம் வெளியான அடுத்த வாரமே, ஜூலை 11-ம் தேதி சிவகுமாருடன் நடித்த ‘சாமந்திப்பூ’ வெளியானது.
இதன் பிறகு, அந்த வருடம் நவம்பர் 6-ம் தேதி தீபாவளியன்று, பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ வெளியானது. எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் நாவலை மூலக்கருவாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டது. பானுசந்தர், பிரதாப், சிறிய கதாபாத்திரத்தில் மோகன் முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்தில், ஷோபாதான் நாயகி.
இந்தப் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார். இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகியிருந்தன. குறிப்பாக ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலையும் அதன் நடுநடுவே இழை இழையாக வரும் கிடார் இசையையும் மறக்கவே முடியாது.
சைக்கோ கில்லர் படமான ‘மூடுபனி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தைப் பார்க்கத்தான் ஷோபா உயிருடன் இல்லை.
மேலும், ’பாலுமகேந்திரா - ஷோபா உறவு’ குறித்து பேசப்பட்டு வந்த நிலையில், மரணத்துக்குப் பிறகு வந்த பாலுமகேந்திராவின் ‘மூடுபனி’ படத்துக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்புக்கு தக்க வகையில், படத்தின் டைட்டிலில்,
‘எனக்கு எல்லாமாய் இருந்த
என் அன்பு மனைவி
அம்மு (ஷோபா)வுக்கு
ஆத்ம சமர்ப்பணம்.
- பாலுமகேந்திரா’ என ‘மூடுபனி’ திரைப்படத்தை ஷோபாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் பாலுமகேந்திரா.
இதையடுத்து 81-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதியன்று கண்மணி சுப்பு இயக்கத்தில் கலைவாணன் கண்ணதாசனுடன் ஷோபா நடித்த ‘அன்புள்ள அத்தான்’ திரைப்படம் வெளியானது. இதுதான் ஷோபா நடித்து வெளியான கடைசிப்படம்.
படம் வெளியாகி இன்றுடன் (நவம்பர் 6) 39 வருடங்களாகிவிட்டன. ஷோபா காலமாகியும் அத்தனை வருடங்களாகிவிட்டன. இன்று வரை ‘மூடுபனி’ க்கு நிகரான படமும் வரவில்லை; ஷோபாவுக்கு நிகரான நடிகையும் வரவில்லை.
