கீழடி அருங்காட்சியகம்: தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி

கீழடி அருங்காட்சியகம்: தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி
Updated on
1 min read

கீழடி பொருட்களைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களைக் காட்சிப்படுத்த, சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் ரூ.12 கோடியே 21 லட்சத்தில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று ‘தமிழ்நாடு நாள்’ விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''சிந்து, கங்கை நதிக்கரை நாகரித்திற்குப் பிறகு இரண்டாம் நிலை நகர நாகரிகங்கள், தமிழ்நாட்டில் தோன்றவில்லை என்பது வரலாற்று ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. இந்தக் கருத்துக்கு மாறாக சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரிகம் அதாவது தமிழர் நாகரிகம் சிறந்து விளங்கியது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சி.

இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககாலத் தமிழ் மக்களின் தொல் எச்சங்கள் அதிக அளவில் கிடைத்திருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களும், சங்கத்தமிழ் ஆர்வலர்களும் மகிழ்வுடனும் ஆச்சரியத்துடனும் தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புமிக்க சான்றினை சிலர் திராவிட நாகரிகம் என்றும் சிலர் இந்து நாகரிகம் என்றும் திரிக்க முயல்கின்றனர். பொய்க்கு மேல் பொய் சொல்லி ஒரு மாயையை நிஜமாக்க முயல்கின்றனர்.

அந்த வரலாற்று மாய்மாலர்களின் பொய்க்கூற்றை, நடுநிலையான நேர்மையான வரலாற்று ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியே வருகின்றனர். கீழடி நாகரிகம் என்பது தமிழரின் நாகரிகம் என்பதை உரக்க எடுத்துச்சொல்லியே வருகிறார்கள்.மேலும் இங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

தமிழரின் இக்கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாட்டு முதல்வரான எடப்பாடி பழனிசாமி, "ஆதியில் முதல் மனிதன் தோன்றியது தமிழ் பேசும் நிலத்தில்தான் என்று கூறி கீழடி அகழாய்வு பொருட்களைக் காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். அதுவும் தமிழ்நாடு தினம் கடைபிடிக்கப்படும் என்று நவம்பர் 1-ம் தேதி அறிவித்துள்ளார்.

நமது தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்குத் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பாக பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in