காவல் துறையினர் வழக்குப் பதிவு: ஊடகங்களைச் சாடும் மீரா மிதுன்

காவல் துறையினர் வழக்குப் பதிவு: ஊடகங்களைச் சாடும் மீரா மிதுன்
Updated on
2 min read

காவல் துறையை இழிவாகப் பேசி, ஓட்டல் ஊழியரை மிரட்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் மீரா மிதுன்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் மீரா மிதுன். அச்சந்திப்பில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தனக்கு இன்னும் 10 பைசா கூட விஜய் தொலைக்காட்சி வழங்கவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தமிழகக் காவல் துறையையும் கடுமையாகச் சாடினார்.

சிலர் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு தமிழ்நாடு போலீஸார் என் மீது பொய் வழக்குகள் போடுகின்றனர் என்றும் பணம் கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்குப் போடுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இதை உயர் அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்ல உள்ளதாகவும், அதன் மூலம் என்மீது வழக்கு போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் மீரா மிதுன் பேசினார்.

இந்நிலையில், ஹோட்டல் அலுவலர் அருண் (27) என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் மீது போலீஸார் நடிகை மீரா மிதுன் மீது பிரிவு 294 (பி) (பொது இடத்தில் அவதூறாக, இழிவாகப் பேசுதல்) 506(1)( கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்போ "தமிழ்ச்செல்வி @ மீரா மிதுன் ( Miss Tamil Nadu ) என்பவர் மீது எழும்பூர் சட்டம் ஒழுங்கில் 294(b) , 506(l) IPC பிரிவின் கீழ் 26-8-19 வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தப் புகார் தொடர்பான செய்திகளை அனைத்து ஊடகங்களுமே வெளியிட்டன. அது அனைத்துமே பொய் என்று இரண்டு வீடியோ பதிவுகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தேன். அச்சந்திப்பில் நிறைய உண்மைகளைச் சொன்னேன். இதைப் பிடிக்காத நிறைய மீடியாக்கள் ஒரு தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

இந்தச் செய்தியை மக்களும் நம்பத் தயாராக இல்லை. மக்களுக்கே அனைத்து உண்மைகளும் புரியத் தொடங்கிவிட்டன. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது. என்னை வைத்துதான் உங்களுக்கு டிஆர்பி என்பதற்காக, ஒரு பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. அது உண்மை ஆகவும் ஆகாது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குச் சென்றதிலிருந்து என்னைப் பற்றி மிகவும் தவறான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹோட்டலில் இருக்கும் நபருக்கு நான் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் அவர் புகார் கொடுத்து, எஃப்.ஐ.ஆர் போட்டிருப்பதாகவும் செய்திகளைப் பரப்புகிறார்கள். எனக்கே சிரிப்பு தான் வருகிறது. ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதைத் தவறாக உபயோகிப்பதை நிறுத்தங்கள். தவறான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி வரும் என நினைக்கிறேன்.

ஒரு தவறான செய்தியினால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பதைப் பலரும் தெரிந்திருப்பார்கள். யார் சொல்லி இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் தான் நிறையப் பிரச்சினைகள் உருவாகின்றன. 2 நாட்களுக்கு முன்பு தான் சில காவல்துறை அதிகாரிகள் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்று பேசியிருந்தேன். ஆகையால், இப்போது அப்படி எஃப்.ஐ.ஆர் போட்டியிருந்தால் கூட காவல்துறைக்கே பிரச்சினைதான்.

எந்தவொரு எஃப்.ஐ.ஆரும் என் மீது பதிவாகவில்லை. எந்தப் பிரச்சினையுமில்லை. நீங்களே ஒரு கதையைத் தயார் செய்து போடுகிறீர்கள். இப்படித்தான் என்னைப் பற்றி இந்த வருடம் முழுக்க தவறான செய்தியே போட்டுப் போட்டு, தவறான பிம்பத்தையே உருவாக்குகிறார்கள். அனைத்தையும் தாண்டி, நான் வலுவான பெண்ணாக இருக்கிறேன்" என்று பேசியுள்ளார் மீரா மிதுன்.

காவல் துறையினர் சார்பில் எழும்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு பிரிவுகளில் வழக்கு உள்ள நிலையில், ரேடிசன் ப்ளூ ஹொட்டலில் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குற்றப்பிரிவுடன் தெரிவித்துள்ள நிலையில் மீரா மிதுன் என் மீது புகாரே அளிக்கப்படவில்லை என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in