

சூர்யா நடிப்பில் உருவாகி வந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஜனவரி வெளியீட்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'என்.ஜி.கே' படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் 'சூரரைப் போற்று' படத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் பிரதானக் காட்சிகள் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் வெளியாகும் எனத் தகவல் வெளியானது.
ஆனால், ஜீத்து ஜோசப் - கார்த்தி இணைந்துள்ள படமும் டிசம்பர் வெளியீடாக இருப்பதால் சூர்யா - கார்த்தி படங்கள் ஒரே தேதியில் என்று செய்திகள் வெளியானது. இது தொடர்பாக விசாரித்த போது, 'சூரரைப் போற்று' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து, டிசம்பர் வெளியீட்டுக்குத் தயாராக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்கள். மேலும், ஜனவரி வெளியீடாகக் கண்டிப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்கள்.
தற்போது 'சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 10-ம் தேதி வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனத்துடன் இணைந்து குனித் மோங்காவும் தயாரித்து வருகிறார்.
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் சூர்யா.