

ரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளதற்கு, தொலைபேசி வாயிலாக கமல் தன் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். சினிமா துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு, தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் ரஜினி. மேலும் தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகினர் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிலர் கமலுக்கு ஏன் இன்னும் கொடுக்கப்படவில்லை, அவர்தான் திரையுலகில் பல தளங்களிலும் பணிபுரிந்து வருகிறார் என்ற கருத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், ரஜினிக்கு கமலும் வாழ்த்து தெரிவிக்காமலிருந்தார். இதை முன்வைத்து பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் இருக்கிறார் கமல். குவாலியரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஆகையால், 'இந்தியன் 2' படப்பிடிப்பிலிருந்து தொலைபேசி வாயிலாக கமல் தன் வாழ்த்தை ரஜினிக்குத் தெரிவித்துவிட்டார் என்று கமல் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாரத்தில் கமலின் பிறந்த நாள் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் ரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.