

தெலுங்கு டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதால், செப்டம்பரில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது படக்குழு.
ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. சிம்ரன், ஆர்யா ஆகியோர் இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஆதிக் இயக்கி வருகிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டாலும், படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்காமலேயே இருந்தார்கள்.
எப்போது வெளியீடு என்று படக்குழுவிடம் விசாரித்த போது, "ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். தமிழ் படத்துக்கான பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டன, தெலுங்கு டப்பிங் பணிகள் முடிப்பதற்கு தான் தாமதம் ஏற்பட்டது.
தற்போது தெலுங்கு பணிகளும் முடிந்துவிட்டதால், வரும் வாரத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு செப்டம்பரில் வெளியிட தீர்மானித்திருக்கிறோம்" என்றார்கள்.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து 'ப்ரூஸ் லீ' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்