

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
'வீரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. இத்தாலியில் ஒரு பாடல் படமாக்கிவிட்டு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் சில காட்சிகளை படமாக்கினார்கள். தற்போது சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு அருகே உள்ள மருத்துவமனையில் சில காட்சிகள் இன்று (புதன்கிழமை) படமாக்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வில்லனுடன் அஜித் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
க்ளைமாக்ஸ் காட்சியில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் இருவரும் அஜித்துடன் வரும் காட்சிகள் இருப்பதால், இருவருடைய தேதிகளையும் கேட்டிருக்கிறது படக்குழு. விரைவில் அக்காட்சியும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்கிறது படக்குழு. தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது படத்தயாரிப்பு நிறுவனம்