

'கைதி' படத்துக்குக் கிடைத்த பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்தி. டெல்லி திரும்ப வருவான் என ட்விட்டரில் தகவல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்குமே லாபகரமான படமாக இது மாறியுள்ளது.
உலகளவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இந்தப் படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. மேலும், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ் திரையுலகினர் மட்டுமன்றி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவும் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் கார்த்தி. இன்று (நவம்பர் 3) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறிய கடிதத்தில், "'கைதி' படத்துக்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும் பாராட்டுக்கும் என்னால் நன்றி கூறினால் மட்டும் போதுமா என்று தெரியவில்லை. ஒரு நல்ல கதையைக் கொடுக்க விரும்பி எங்கள் குழுவினர் அதில் இதயப்பூர்வமான உழைப்பைக் கொடுத்தார்கள். ஆனால் இத்தகைய அதிகமான வரவேற்புகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதயம் முழுக்க நன்றியுடன் தலைவணங்குகிறேன். அனைவருக்கும் நன்றி.. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 'கைதி' படத்தைப் பார்த்துப் பாராட்டியிருந்த அனைத்து திரையுலக பிரபலங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, "பத்திரிகைத்துறை நண்பர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துகளுக்கும் பாராட்டும் வார்த்தைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
என்னுடைய ஏற்ற இறக்கங்களில் என்னோடு இருந்து எனக்கு அதிகமான அன்பைக் கொடுத்த என்னுடைய சகோதர சகோதரிகளுக்கு, உங்களைப் பெருமைப்படுத்த நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன். உங்களுக்காக டெல்லி திரும்ப வருவான்" என்று தெரிவித்துள்ளார் கார்த்தி.