

'பிகில்' படத்துக்கான கலவரத்தில் விஜய் ரசிகர்கள் கைது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்டோபர் 25-ம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படம் வெளியானது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் காட்சிகள் தொடங்கப்படும் எனப் பல திரையரங்குகள் அறிவித்தன. ஆனால் க்யூப் பாஸ்வேர்டு அதிகாலை 4:45 மணியளவில் கொடுக்கப்பட்டதால், 5 மணியளவில்தான் சிறப்புக் காட்சிகள் தொடங்கப்பட்டன.
இந்த நேர தாமதம், கிருஷ்ணகிரியில் வன்முறையாக மாறியது. 5 ரோடு ரவுண்டானா அருகில் திரண்ட விஜய் ரசிகர்கள், போக்குவரத்து சிக்னல், தடுப்புக் கம்பிகள், ஒலிப்பெருக்கிகள், தீபாவளி விற்பனைக்காக சாலையோர வியாபாரிகள் வைத்திருந்த பொருட்கள் ஆகியவற்றை உடைத்துச் சேதப்படுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ரசிகர்கள் மீது தடியடி நடத்திக் கலைத்தனர்.
வன்முறையின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து அதில் சம்பந்தப்பட்ட 32 பேரைக் கைது செய்து சிறையில் போலீஸார் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து மேலும் சில வீடியோக்களை வைத்து 18 பேரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளது காவல்துறை. இந்த விவகாரம் தொடர்பாக, விஜய் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் இந்தக் கைது விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில், "அரசாங்கமும் போலீஸும் தவறு செய்தவர்கள் மீது அதிவேக நடவடிக்கை எடுப்பதைப் பாராட்டியே தீரவேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சி விஜய் மட்டுமில்லாமல் யார் நடித்த படம் ரிலீஸ் ஆனாலும் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாமா?. இந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்கலை அல்லாமல் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.