

சர்வானந்த் நடித்துவரும் புதிய படத்தில் நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சேரன் இயக்கத்தில் உருவான 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்குப் பிறகு தமிழில் எந்தவொரு படத்திலும் நடிக்காமலிருந்தார் சர்வானந்த். நீண்ட வருடங்கள் கழித்து புதுமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறிய கதை பிடித்துவிடவே நடித்து வருகிறார்.
இந்தப் படம் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்தப் படத்தின் மூலமாகத் தெலுங்கிலும் கால் பதிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
நாயகியாக ரீத்து வர்மா, நாசர், ரமேஷ் திலக், சதீஷ், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இரண்டு மொழிகளிலுமே சர்வானந்த் - ரீத்து வர்மா நடிக்கிறார்கள். அவர்களைச் சுற்றி வரும் கதாபாத்திரங்கள் இரண்டு மொழிகளிலுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'மனம்' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், அதற்குப் பிறகு இந்தப் படத்தில் தான் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழ் - தெலுங்கு என இருமொழிகளிலும் நடிக்கிறாரா அல்லது தெலுங்கில் மட்டும் நடிக்கிறாரா என்பதைப் படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவாளராக சுஜித் சாரங், எடிட்டராக ஸ்ரீஜித் சாரங் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.