

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'வியூகம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீஸர் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தர்பார்' படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதைத் தவிர ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்து பல்வேறு பெயர்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனமோ இன்னும் அதிகாரபூர்வமாக எதையுமே அறிவிக்கவில்லை.
இதனிடையே இந்தப் படத்துக்கு 'வியூகம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் - சிவா கூட்டணி இணைந்து பண்ணப் படங்கள் அனைத்துமே 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என அனைத்துமே ’V’ சென்டிமெண்ட்டில் இருந்தது. அதை ரஜினி படத்துக்குத் தொடர முடிவு செய்து 'வியூகம்' என வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இதை உறுதிப்படுத்தப் படக்குழுவினரிடம் விசாரித்த போது, "இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. அனைத்தையும் தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும்" என்று தெரிவித்தார்கள்.