

ராஜு முருகன் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' படத்துக்குத் தணிக்கை சர்ச்சைகள் நிறைவுற்று 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜு முருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நடாஷா சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. இங்கு தணிக்கை மறுக்கப்பட, இரண்டாம்கட்ட தணிக்கைக்குச் சென்றது. அங்கும் சில காட்சிகளை நீக்கச் சொன்னதால், படக்குழு அதிர்ச்சியடைந்தது.
மேலும், TRIBUNAL-க்குச் சென்றால், படம் வெளியாக 3 மாதங்களாகும் என்பதால், இரண்டாம்கட்ட தணிக்கைக் குழுவிடம் என்னென்ன காட்சிகள் நீக்க வேண்டும் என்பதைக் கேட்டு வாங்கி, பணிகளைத் தொடங்கியது படக்குழு. இறுதியில், படத்தின் கதைக்களம் கெடாத வண்ணம் மாற்றியமைத்து மீண்டும் தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.
அப்போது, வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது படக்குழு. நவம்பரில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.