

ஒரு காட்சிக்குத் தேவையான டிக்கெட்களை விட மிகக் குறைவாக இருந்ததால், 'பிகில்' காட்சியை ரத்து செய்துள்ளது திரையரங்க நிர்வாகம்.
அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தது ஏஜிஎஸ் நிர்வாகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
'மெர்சல்', 'சர்கார்' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'பிகில்' படத்தின் மூலமாக உலகளவில் மொத்த வசூலில் 200 கோடியைத் தாண்டியுள்ளார் விஜய். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் இதர நாடுகள் என அனைத்திலுமே நல்ல வசூல் செய்து வருகிறது.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 31) மதியம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் கூட்டம் மிகக் குறைவாக இருந்ததால், அதில் டிக்கெட் புக் செய்தவர்கள் அனைவரையும் தேவி திரையரங்கில் படம் பார்க்க உட்கார வைத்துள்ளனர். வழக்கமாக ஒரு காட்சி திரையிட வேண்டும் என்றால், 30 டிக்கெட்களாவது இருக்க வேண்டும். அதைவிட தேவி பாரடைஸ் திரையரங்கில் குறைவாகவே இருந்துள்ளது.
மாலையில் இரண்டு திரையரங்கிலும் ‘பிகில்’ திரையிடப்படும் என்றும், இரவுக் காட்சிக்கு டிக்கெட்கள் குறைவு என்பதால் அதிலும் மாற்றம் இருக்கும் எனவும் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது வழக்கமான நடைமுறை என்றும், எப்படி இந்தத் தகவல் வெளியே தெரிந்தது எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளது.
உலகளவில் நல்ல வசூல் செய்து வரும் படத்துக்கு, சென்னையின் முக்கியத் திரையரங்கில் இந்த நிலை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்தத் திரையரங்கின் ஆன்லைன் புக்கிங் புகைப்படங்களை வைத்துக் கொண்டு அஜித் ரசிகர்களும் வழக்கமான தங்களுடைய கிண்டலைத் தொடங்கியுள்ளனர்.