திடீர் திருமணம் செய்துகொண்ட லட்சுமி ப்ரியா

திடீர் திருமணம் செய்துகொண்ட லட்சுமி ப்ரியா
Updated on
1 min read

பல்வேறு படங்களில் நடித்து வந்த லட்சுமி ப்ரியா திடீரென்று திருமணம் செய்துகொண்டார்.

2010-ம் ஆண்டு வெளியான 'முன்தினம் பார்த்தேனே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி. அதற்குப் பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மாயா' படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்திருந்தார் லட்சுமி ப்ரியா. திரைப்படங்களைத் தாண்டி அவரைப் பலருக்கும் தெரியவைத்தது 'லட்சுமி' குறும்படம்தான். சர்ஜுன் இயக்கிய இந்தக் குறும்படம், கெளதம் மேனனின் யூ டியூப் பக்கத்தில் நவம்பர் 1, 2017-ல் வெளியிடப்பட்டது. இதுவரை 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வஸந்த் இயக்கத்தில் 'சிவரஞ்சினியும் சில பெண்களும்' என்ற படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் லட்சுமி ப்ரியா நடித்துள்ளார். இன்னும் திரையரங்கில் வெளியாகாத இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்து வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வெங்கட்ராகவன் ஸ்ரீனிவாசன் என்ற எழுத்தாளரைத் திருமணம் செய்துகொண்டார் லட்சுமி ப்ரியா. இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in