

உலகளாவிய வசூலில் 'விஸ்வாசம்' படத்தின் வசூலை முறியடித்துள்ளது 'பிகில்'.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. சுமார் 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக உலக அளவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
உலக அளவில் 3 நாட்களில் மொத்த வசூலில் 100 கோடியைத் தாண்டியது 'பிகில்'. தமிழகத்தில் மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என வெளியான அனைத்து இடங்களிலுமே நல்ல வசூல் செய்து வருகிறது. அமெரிக்காவில் சுமார் 1 மில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது 'பிகில்' வசூல்.
தற்போது 'பிகில்' படத்தின் உலகளாவிய வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதன் மூலம் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் வசூலான ரூ.181 கோடியைத் தாண்டியுள்ளது 'பிகில்'. இன்னும் சில நாட்களில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தின் வசூலையும் முறியடித்துவிடும் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரபாஸுக்குப் பிறகு விஜய்தான் தொடர்ச்சியாக உலக அளவில் 200 கோடியைத் தாண்டிய 3 படங்களைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வசூலில் ரூ.90 கோடியைத் தாண்டியுள்ளது 'பிகில்'. இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 'பிகில்' படத்தின் தமிழக உரிமையை 83 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். வரித்தொகை, பங்குத் தொகை எனக் கழித்தது போக கைக்கு 83 கோடி ரூபாய் வர வேண்டும் என்றால் தமிழகத்தில் 140 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ய வேண்டும்.
தற்போதுள்ள வசூல்படி தமிழகத்தில் இந்த வசூலைத் தாண்டி அனைவருக்குமே லாபகரமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.