

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர்கள் தனுஷ், சிம்பு போட்டியிட உள்ளதாக திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் நேற்று முன்தினம் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் மற்றும் விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் விஷால், நடிகர்கள் தனுஷ், சிம்பு ஆகியோர் போட்டியிடுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது. அதை கேட்பது தவறா?. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நாங்கள் உள்ளே வரக்கூடாது என எதிர்க்கிறார்கள். ஆனால், வந்துவிட்டோம். சேலம் நாடக நடிகர் சங்கத்துக்கு நடிகர் ரித்தீஸ் ரூ.10 லட்சம் வழங்கியதாக கூறுகின்றனர். அதற்கான பதிவு இல்லை. சரத்குமார் பெரிய நடிகர், வயதில் மூத்தவர், அவரை நாங்கள் எப்படி மிரட்ட முடியும்.
எங்கள் அணியில் நடிகர் நாசர், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். கமல் போன்ற பெரிய நடிகர்களை, சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் அவமரியாதை செய்கின்றனர்.
முதல்வரை சந்திப்போம்
நடிகர் தனுஷ், சிம்பு போன்றோர் தேர்தலில் போட்டி யிடுவதை வரவேற்கிறோம். சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நடிகர்கள் நாசர், சரவணன், கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.