

வி.ராம்ஜி
ஆரம்ப காலகட்டத்தில், ஒரே வருடத்தில் 4 படங்களை இயக்கி நடித்தார் பாக்யராஜ். அந்த நான்கு படங்களும் ஒவ்வொரு விதம். நான்கு படங்களையும் ஏற்றுக் கொண்டு ரசித்தார்கள் ரசிகர்கள்.
1979-ம் ஆண்டு பாக்யராஜ் நடித்து இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. நல்ல படம் எனப் பெயர் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் கவுண்டமணியின் காமெடியும் கல்லாபெட்டி சிங்காரத்தின் காமெடியும் ஏகத்துக்கும் பேசப்பட்டன. ‘காதல் வைபோகமே’ என்ற பாடல் செம ஹிட். கங்கை அமரன் இசையமைத்திருந்தார். சுதாகரும் சுமதியும் நடித்த இந்தப் படத்தில், பாக்யராஜ் செகண்ட் ஹீரோ.
79-ம் ஆண்டில் இந்தப் படம் வந்தது. இதையடுத்து, 80ம் ஆண்டு, ‘ஒரு கை ஓசை’ எனும் படத்தை தயாரித்து நடித்து இயக்கினார் பாக்யராஜ். ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினிதான் நாயகி. வாய் பேசமுடியாதவராக பாக்யராஜ் நடித்திருந்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இந்தப் படமும் மக்களால் பாராட்டுகளைப் பெற்றது என்றாலும் மிகப்பெரிய வெற்றியை, கலெக்ஷனைக் கொண்டிருக்கவில்லை.
81-ம் ஆண்டு, பாக்யராஜ் வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு.
பாக்யராஜ், சரிதா, மாஸ்டர் சுரேஷ் என மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, விவாகரத்தான கணவனும் மனைவியும் மீண்டும் சேருவதாக எடுக்கப்பட்ட’மெளனகீதங்கள்’ அடைந்த வெற்றியும் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரிய வரலாறு. 1981-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 23-ம் தேதி ரிலீசான இந்தப் படம், வெள்ளிவிழாப்படமாக அமைந்தது.
இந்தப் படம் குறித்து இன்னொரு சுவாரஸ்யம்... படம் வருவதற்கு முன்னதாக, படம் எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, படத்தின் ஸ்டில்களைப் பிரசுரித்தபடி, படத்தின் கதை வசனம் முழுக்க, பிரபல வாரப் பத்திரிகையொன்றில் தொடராக வெளிவந்தது. படத்தின் கதையும் ஸ்டில்களும் முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பிறகு, படம் மீதான ஒரு கிக் குறைந்துவிடும் என்பார்கள். ஆனால், முழுக்கதையும் வசனமும் தெரிந்து, அறிந்து கொண்ட பிறகு, ‘மெளன கீதங்கள்’ படம் ரிலீசானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள், திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். பெண் ரசிகைகள், பாக்யராஜுக்கு முதன்முதலாக அதிகரித்தது, இந்தப் படத்தில்தான்! எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். இந்தப் படத்துக்கும் கங்கை அமரன் தான் இசையமைத்திருந்தார்.
அதே 81-ம் ஆண்டு. மார்ச் மாதம் 27-ம் தேதி, பாக்யராஜ் நடித்து இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ வெளியானது. பாக்யராஜ், ராதிகா, கல்லாபெட்டி சிங்காரம், ராமுலு, பழனிச்சாமி, செந்தில், சூரியகாந்த் முதலானோர் நடித்தார்கள்.
மூன்று இளைஞர்கள். நண்பர்கள். மூவரும் ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள். இதனால் சண்டை. பிரிகிறார்கள். யார் காதலிக்கிறார், யாரை அந்தப் பெண் காதலிக்கிறார். அந்தக் காதலுக்கு என்ன சிக்கல். சிக்கலை நண்பர்கள் சேர்ந்து எப்படிக் களைகிறார்கள் என்பதையெல்லாம் ஜாலியாகவும் கேலியாகவும் லைட்டாகச் சொன்னதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது இந்தப் படம்.
இந்தப் படத்தில்தான் இளையராஜாவுடன் முதன்முதலாக இணைந்தார் பாக்யராஜ். கதையோடு கூடவே வருகிற காமெடிக் காட்சிகள், இன்றைக்கும் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. ‘ ஏ காவ் மே ஏ கிஸான் ரஹ் தாத்தா’ எனும் இந்தி வரிகள் மிகப்பிரபலம்.
ஜனவரி மாதம் ‘மெளன கீதங்கள்’ வெற்றி. மார்ச் மாதத்தில் ‘இன்று போய் நாளை வா’. அதுவும் வெற்றி.
இதன் பின்னர், தன் நண்பரும் ஆரம்பகாலத்தில் கைதூக்கிவிட்டவர்களில் ஒருவருமான தூயவனுக்காக, ஓர் படம் பண்ணிக் கொடுத்தார். தேவர் பிலிம்ஸில் கதை இலாகாவில் இருந்தவர் தூயவன். இவருக்காக பாக்யராஜ், நடித்து இயக்கிக் கொடுத்த படம் ‘விடியும் வரை காத்திரு’. இந்தப் படத்தில் பாக்யராஜ், சத்யகலா, கராத்தே மணி, கோகுல்நாத், சங்கிலி முருகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவனாக பாக்யராஜ் நடித்திருந்தார். இந்த நெகடிவ் ரோலைக் கூட மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சொத்துக்கு ஆசைப்பட்டு, சத்யகலாவைக் கல்யாணம் செய்துகொண்டு, பிறகு அவரைக் கொலைச் செய்யத் திட்டமிடுவார். இந்தத் திட்டங்களும் காட்சி அமைப்புகளும் அற்புதம்தான் என்றபோதும் மனைவியைக் கொலைச் செய்கிறவராக பாக்யராஜைப் பெண்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் பாக்யராஜ் செய்த க்ரைம் திரில்லர் ரசிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது.
ஜனவரி, மார்ச், மே ஆகிய மாதங்களுக்குள் மூன்று படங்கள் வந்திருக்க, நான்காவதாக ஒரு படமும் வெளியானது. 1981-ம் ஆண்டு, அக்டோபர் 26-ம் தேதி தீபாவளியன்று ரிலீசானது இந்தப் படம். பாக்யராஜூக்கு ‘மெளன கீதங்கள்’ தந்த வெற்றியை விட பன்மடங்கு வெற்றியையும் ரசிகப்பட்டாளத்தையும் பாக்யராஜுக்குத் தந்தது. அந்தப் படம் ‘அந்த 7 நாட்கள்’.
பாக்யராஜ், அம்பிகா, காஜாஷெரீப், ராஜேஷ், கல்லாபெட்டி சிங்காரம் முதலானோர் நடித்த இந்தத் திரைப்படம், தீபாவளியன்று வந்த படங்களிலேயே அதிக நாள் ஓடிய படமாகவும் அதிக வசூல் பெற்ற படமாகவும் அமைந்தது.
இந்தப்படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட். பாலக்காட்டு மாதவன், வசந்தி, கோபி ஆகிய கேரக்டர்கள் இன்றைக்கும் பேசப்பட்டு வருகின்றன. ‘எண்ட காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரலாம். ஆனா உங்க மனைவி எனக்கு காதலியாக முடியாது ஸாரே...’ எனும் வசனம் இன்றைக்கு வரைக்கும் பிரபலம்.
ஆக, ஜனவரியில் ‘மெளன கீதங்கள்’, மார்ச்சில் ‘இன்று போய் நாளை வா’, மே மாதத்தில் ‘விடியும் வரை காத்திரு’, அக்டோபர் மாதம் தீபாவளியில் ‘அந்த 7 நாட்கள்’ என நான்கு படங்களை 1981-ம் ஆண்டு வெளியிட்டு, மிகப்பெரிய வெற்றியையும் பேரையும் புகழையும் சம்பாதித்தார் கே.பாக்யராஜ்.