

எங்களில் ஒருவருக்குத் திருமணம் ஆகும் வரை புரளிகள் அடங்காது என்று அனுஷ்காவுடன் திருமண வதந்தி தொடர்பாக பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பிரபாஸ் - அனுஷ்கா திருமண வதந்தி தொடர்ச்சியாகச் சுற்றி வருகிறது. இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால், உடனடியாக திருமண வதந்தி பற்றிக் கொள்ளும். சமீபத்தில் இருவரும் 'பாகுபலி' படத்தில் இணைந்து நடித்தனர். அதனைத் தொடர்ந்து திருமண வதந்தி இருவரையும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.
'இது வெறும் வதந்தி தான்' என்று முற்றுப்புள்ளி வைத்தார் பிரபாஸ். ஆனால், சில நாட்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற 'பாகுபலி' படத்தின் சிறப்பு இசை நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி கலந்து கொண்டது. இதனால், மீண்டும் திருமண வதந்தி மீண்டும் வலம் வரத் தொடங்கியுள்ளது.
டிசம்பரில் திருமணம் என்றும், திருமணத்துக்குப் பிறகு குடியேறப் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கியிருப்பதாகவும் செய்திகளில் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக பிரபாஸ், "சில மாதங்களுக்கு முன்பு அமைதியாக இருந்தார்கள். இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். நானும் அனுஷ்காவும் 11 வருடங்களாக நண்பர்கள்.
எங்களுக்கு நடுவில் ஏதாவது இருந்தால் நாங்கள் ஏன் அதை மறைக்க வேண்டும்? எங்களில் ஒருவருக்குத் திருமணம் ஆகும் வரை இந்த புரளிகள் அடங்காது என நினைக்கிறேன். அனுஷ்கா மிக அழகான பெண்களில் ஒருவர். தேவசேனாவாக நடித்தவர். ரசிகர்கள் பாகுபலியையும், அவரையும் ஒரு ஜோடியாகப் பார்க்கிறார்கள். எனக்கு எப்படி இந்த வதந்திகளைத் தடுப்பது என்று தெரியவில்லை" என்று தெரிவித்துள்ளார் பிரபாஸ்