

நீ கற்றுக் கொடுத்த ஒற்றைப் பாடம். இனி பலரைக் காக்கும் வேதம் என்று சுஜித் மரணம் தொடர்பாக அருண்ராஜா காமராஜ் தெரிவித்துள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சவப்பெட்டியில் வைத்து சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித் மறைவுக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் 'கனா' படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஜித் மரணம் தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அருண்ராஜா காமராஜ், "குறைகள் கூறுவதால் இங்குள்ளவர்களின் மனசாட்சிகளுக்கு ஓர் ஆறுதல். உன்னைக் குற்றம் சொல்லியும் சிலர் ஆறுதலடைந்தனர். நீ கற்றுக் கொடுத்துச் சென்ற ஒற்றைப் பாடம் இனி உன் போல் பலரைக் காக்கும் வேதமாகட்டும். உன் போராட்டமும் அதனூடு கூட இருந்த ஒவ்வொரு உள்ளமும் வணங்கப்பட வேண்டியவர்கள்" என்று தெரிவித்துள்ளார்.