

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில், காமெடியனாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார்.
ரஜினி தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு (2020) பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘தர்பார்’ படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆதித்யா அருணாச்சலம் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். ஆதித்யா என்பது ஏ.ஆர்.முருகதாஸின் மகன் பெயர். அருணாச்சலம் என்பது அவரின் தந்தை பெயர். இரண்டையும் இணைத்து ரஜினி கதாபாத்திரத்தின் பெயராக வைத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தீம் மியூஸிக்குடன் கூடிய மோஷன் போஸ்டர், வருகிற நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அனிருத் அறிவித்துள்ளார்.
‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படம், ஆக்ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் சிவா. மேலும், ரசிகர்கள் கொண்டாடக்கூடிய படமாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
சிவா படங்களில் வழக்கமாகப் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் இருவரும் இந்தப் படத்தில் பணியாற்றுவார்கள் எனத் தெரிகிறது. அதேபோல், ‘விஸ்வாசம்’ வெற்றியால் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைப்பார் என்கிறார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் காமெடியனாக சூரி ஒப்பந்தமாகியுள்ளார். சிவா இயக்கிய ‘வேதாளம்’ படத்தில் காமெடியனாக நடித்தவர் சூரி. ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற டிசம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.