

ஏன் விஜய்யை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள் என்று தனது ட்விட்டர் பதிவில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
'பிகில்' படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் காயத்ரி ரகுராமும் ஒருவர். தீவிர பாஜக கட்சி ஆதரவாளரான இவர், 'பிகில்' படத்தைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் பாராட்டி ட்வீட் செய்தார்.
அந்த ட்வீட்களுக்கு, "விஜய் பாஜகவின் பினாமியான ஆளுங்கட்சியை விமர்சிக்கிறார். ஆனாலும் நீங்கள் விஜய்யை ஆதரிக்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலை மேடம்?" என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் "ரேடியோ, டிவி காமெடி நிகழ்ச்சி, அரசியல்வாதிகளின் பேச்சு என எல்லா இடங்களிலும் அளவில்லாமல் விமர்சனங்கள் உள்ளன. விமர்சனங்கள் தவறல்ல. ஆனால் ஏன் நடிகர் விஜய்யை மட்டும் கேள்வி கேட்கிறீர்கள்? அவர் அவரது பங்கை நடிப்பில் தந்துள்ளார். அதில் தவறே இல்லை. பொழுதுபோக்கைப் பொழுதுபோக்காகப் பாருங்கள். தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.