

கா.இசக்கிமுத்து
போஸ்டர், தலைப்பு, டீஸர், டிரெய்லர் என அனைத்துமே ‘கைதி’ படத்தின் எதிர்பார்ப் புக்கு முக்கிய காரணம். அனைத்துக்கும் என்னுடைய டீம்தான் காரணம்’ என்று எதார்த்தமாக பேசினார் கார்த்தி. ‘சுல்தான்’ படப்பிடிப்பில் இருந்த அவருடன் நடந்த உரையாடலில் இருந்து..
‘கைதி’ படத்தில் நடித்தது முழுக்க ஆண்கள்தான். இப்படி நீங்கள் நடிப்பது முதல்முறைதானே?
நிறைய ஆக்ஷன் காட்சிகளுக்கு நடுவில் கைதியாக நடிப்பதுதான் சவாலாக இருந்தது. 10 ஆண்டுகள் ஜெயிலுக்குள் இருந்து வெளியே வந்தவன் எப்படி வெளிஉலகைப் பார்ப்பான் என்கிற களம் புதிது. அதுக்காகவே லோகேஷ் நிறைய பேரிடம் தகவல் சேகரித்திருந்தார்.
படத்தில் லாரி ஓட்டுகிறீர்கள். அதிலும் லாரி வேகமாகச் செல்லும்போதே சண்டை. எப்படி இருந்தது அந்த அனுபவம்.?
படப்பிடிப்பில் என்ன, எப்படி எடுக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு வைத்திருந்தனர். பனிக் காலத்தில் படப்பிடிப்பு நடத்தியதுதான் கஷ்டமாக இருந்தது. அதற்கு கொஞ்சம் பயிற்சியும் தேவைப் பட்டது.
கார்த்தியை இயக்கினால் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை இயக்க வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு மீம் சுற்றி வருகிறது. பார்த்தீர்களா?
பார்த்தேன். முதல் படத்தை இயக்கும்போது அவர்களது திறமை, கதைத் தெரிவு, அதைத்தான் பார்க்க வேண்டும். பெரிய பட்ஜெட் கதையைக் கையாண்டுள்ளார் என்பதால் நம்பிக்கை வைத்து பெரிய வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு மேல் நான் என்ன சொல்வது?
சில தப்பான படங்களில் நடித்துவிட்டோமே என்று வருத்தப்பட்டது உண்டா?
அது அனைத்து நடிகர்களின் வாழ்க்கையிலும் நடக்கும். எப்போதுமே நமக்கு என்ன வரும்.. நமது பிளஸ் என்ன, மைனஸ் என்ன என்பதைப் பார்த்துதான் கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என கற்றுக்கொள்ள அந்தப் படங்கள் உதவின.
அப்பா, அண்ணன், அண்ணி என வீட்டில் அனைவருமே கலைஞர்கள். ஒரு படம் சரியாகப் போகவில்லை என்றால் யார் அதிகமாக வருந்துவார்கள்?
பொதுவாகவே ஆரம்பத்தில் தோல்வி என்ற விஷயத்தை நினைத்து ரொம்பவே வருத்திக்குவோம். போகப்போக நமக்கு ஒரு பக்குவம் வரும். நான் எந்தவொரு படத்துக்கும் குறைவாக உழைப்பதில்லை. ஆகையால் உழைப்பு என்றுமே மாறாது. கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதுதான் நமது பாலிசி.
தற்போது படத்தின் பட்ஜெட்டில் ஹீரோவின் சம்பளமே அதிகமாகப் போகிறது என்ற பேச்சு பரவலாகக் கேட்கிறதே..?
சினிமா வாய்ப்பு என்பது இங்கே நிரந்தரம் கிடையாது. இவருக்கு இவ்வளவு சம்பளம் என்று முடிவு செய்யவே முடியாது. தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டுதான் சம்பளம் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எங்கிருந்து இந்தக் கேள்வி எழுகிறது எனத் தெரியவில்லை.
இந்தி திரையுலகில் இருப்பதுபோல், இங்கு நடிகர்களுக்கு பட லாபத்தில் பங்கு என்ற முறை வரும் என்கிறீர்களா?
பட வெளியீடு சமயத்தில், இங்கு நடிகர்கள் பலரும், தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதன் மூலம் படங்கள் வெளியாகின்றன. வேறொரு படத்தின் கடனை, தற்போதுள்ள படத்தின் நடிகர் அடைப்பது போன்ற சூழல் வருகிறது. அப்படி இருக்கும்போது தயாரிப்பாளர் - நடிகர் இருவரின் நம்பிக்கையை வைத்தே இது சாத்தியமாகும். இங்கு டிக்கெட் விற்பனையே முழுமையாக கணினிமயமாகவில்லை. இவ்வளவு வசூல் என்று யார் உத்தரவாதம் அளிப்பது? அதெல்லாம் வந்தால் இந்தி திரையுலகில் இருப்பது போல் இங்கு வர வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன்.