

'பிகில்' படம் தொடர்பாக உருவான ரசிகர்கள் சண்டையைக் கடுமையாகச் சாடியுள்ளார் சாந்தனு
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது.
'பிகில்' படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்தப் படம் பிடிக்காமல் கருத்து தெரிவித்தவர்களின் கருத்துகளை, இதர நடிகர்களின் ரசிகர்கள் #BigilDisaster என்று பகிர்ந்தார்கள். இதனால் இந்த ஹேஷ்டேக் தமிழகமளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
'பிகில்' படம் பார்த்துவிட்டு நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பதிவில் "விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள். பெரிய ஸ்டார் நடிகர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துள்ளார். ராயப்பன் கதாபாத்திரத்தில் என்னவொரு நடிப்பு. ஒரே மாதிரியாக இருக்கிறார், நடிக்கிறார் என்று கிண்டல் செய்தவர்களுக்கு 'பிகில்' தான் பதில்.
பெண்களின் மதிப்பை உயர்த்துவதில் புத்திசாலி இயக்குநர் அட்லி" என்று தெரிவித்தார். இதற்கு இதர நடிகர்களின் ரசிகர்களோ, படம் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் ட்வீட்களை மேற்கொளிட்டு கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினார்கள். இந்தப் போக்கு ரசிகர்கள் சண்டையாக உருவாகியது.
இதனைத் தொடர்ந்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "டேய் நேரத்தை வீண் செய்யாதீங்க. சமூகவலைத்தள வசையும் சண்டையும் நேர விரயம். உங்கள் லட்சிய ஹீரோ யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவங்க பெயரைக் கெடுக்காதீங்க. போதும்! நீங்கள் யார் மீது குறிவைத்தாலும் அவர் உங்களைப் புறக்கணிக்கவே போகிறார். எனவே தயவு செய்து நேர விரயம் செய்யாதீர்கள். இது அனைவருக்கும் தான். கேக்கறவங்க கேளுங்க, கேக்காதவங்கள சொல்லிப் பிரயோசனம் இல்ல.
யாருடைய படமாக இருந்தாலும் சரி, நான் அதன் தவறைச் சுட்டிக்காட்டுவேன். நீங்கள் பதுங்கியிருந்தால் அது என் தவறல்ல. ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, மாலை வேளையின் கேளிக்கையாக விரும்பவில்லை. அதையும் தாண்டி நான் தவறு என்று நீங்கள் நினைத்தால் சோஷியல் மீடியா பின்னால் குரைப்பதை விட உங்களை நான் என் வீட்டுக்கு வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சாந்தனு.