

இவர்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலமா? என்று கிருஷ்ணகிரியில் கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களைச் சாடியுள்ளார் கஸ்தூரி
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. மேலும், தமிழக அரசு நேற்றிரவு (அக்டோபர் 24) தான் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தது. இதனால், தமிழகமெங்கும் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிட ஆயத்தமாகின.
ஆனால், KDM எனப்படும் பாஸ்வோர்டு வரத் தாமதமானதால் காலை 5 மணிக்கே சிறப்புக் காட்சி தொடங்கப்பட்டது. ஒரு மணி நேர தாமதம், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். படம் தாமதமானதால் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். அங்குள்ள 3 திரையரங்குகளிலும் 4 மணிக்கு வந்த ரசிகர்கள் ரவுண்டானா அருகே சாலையில் வைக்கப்பட்டிருந்த போலீஸாரின் தடுப்புகள் மற்றும் கடைகளின் பேனர்கள் உள்ளிட்டவற்றைச் சாலையில் போட்டு உடைத்தனர்.
இதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. மேலும், அந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. பலரும் இந்தச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் சுமார் 30 பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
விஜய் ரசிகர்களின் இந்தச் செயல் தொடர்பாக கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக கஸ்தூரி, "'பிகில்' திரைப்படம் எத்தகைய சாதனையை நிகழ்த்தினாலும், இன்று நடந்த அராஜகம் தான் எப்போதும் நினைவுக்கு வரும். இது வெறுப்பாளர்களின் சதி என நாம் மன்னிக்கலாம், ஆனால் உண்மையை நம் உள்ளம் அறியும். உண்மையான ரசிகர்கள் தங்கள் நடிகருக்கு அவமானத்தை ஏற்படுத்த மாட்டார்கள்.
இளைஞர்கள் தறிகெட்டு கலவரத்தில் ஈடுபட்ட வெட்கக்கேடு போதாது என்பது போல் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கலவரத்தைத் தூண்டிவிட்டும் மகிழ்ச்சியுடன் அதனை ரசித்ததும் நடந்தேறியுள்ளது. இன்னும் சிலர் கலவரத்தை வீடியோ எடுத்தது படுகேவலமான இழிவாகும், ஏதோ கலவரமே ஒரு சினிமா போல் அவர்கள் இந்த இழிவில் ஈடுபட்டனர். ஒருவர் கூட கலவரத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை.
இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என யாருமே இல்லை. அனைவருமே இளைஞர்கள். இவர்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலமா?. விஜய்யின் ரசிகனோ எதிரியோ என்னவோ எல்லோரும் இளைஞர்கள். ஒரு சினிமா காட்சிக்காக பொதுச் சொத்தை அழிக்கும் இவர்கள்தான் வருங்கால தமிழகத்தின் விடிவெள்ளிகளா ? அய்யோ” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி