

அமெரிக்காவில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலை முறியடித்துள்ளது ‘பிகில்’.
அஜித் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கிய இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10-ம் தேதி ரிலீஸானது. நயன்தாரா ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், ஜெகபதி பாபு, அனிகா, யோகி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்தனர்.
டி.இமான் இசையமைத்த இந்தப் படத்தை, சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரித்தார். குடும்பப் பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, எல்லோருக்கும் பிடித்த வகையில் இருந்தது.
பல நாடுகளிலும் வெளியான ‘விஸ்வாசம்’, அமெரிக்காவில் 277K டாலரை மொத்தமாக வசூலித்தது. ஆனால், விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘பிகில்’, அமெரிக்காவில் முதல் நாளிலேயே ‘விஸ்வாசம்’ வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
வருகின்ற நாட்களுக்கான ஆன்லைன் புக்கிங் மற்றும் முதல் நாள் வசூல் இரண்டையும் சேர்த்து 280K டாலர் வசூலித்துள்ளது ‘பிகில்’. எனவே, போகப்போக இருமடங்கு வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பா - மகன் என விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படத்தை, அட்லீ இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.
விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ‘பரியேறும் பெருமாள்’ கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், அம்ரிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.