Last Updated : 25 Oct, 2019 02:30 PM

 

Published : 25 Oct 2019 02:30 PM
Last Updated : 25 Oct 2019 02:30 PM

முதல் பார்வை: பிகில் 

மகளிர் கால்பந்து அணியின் மூலம் தன் கனவை நிறைவேற்றப் போராடும் கோச்சின் கதையே 'பிகில்'.

சென்னையில் குப்பத்து மக்களின் நண்பனாக வலம் வருகிறார் மைக்கேல் (விஜய்). அவரின் நண்பர் கதிர் கால்பந்தாட்டப் பயிற்சியாளர். விஜய்யைத் தாக்க வரும் டேனியல் பாலாஜி தலைமையிலான ரவுடி கும்பல் கதிரைத் தாக்குகிறது. இதில் கதிர் படுகாயம் அடைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரால் தொடர்ந்து கோச்சாக செயல்பட முடியாத சூழல். இந்நிலையில் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு ஒரு கோச் தேவைப்படுகிறார். அப்போது மைக்கேல் கோச் அவதாரம் எடுக்கிறார். இத்தனை நாள் ரவுடியாக இருந்தவரை ஒரு கோச்சாக எப்படி ஏற்றுக்கொள்வது என்று வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோச்சாக நடந்துகொள்ளும் அவர் தலைமையின் கீழ் செயல்பட மறுக்கின்றனர்.

யார் இந்த மைக்கேல், அவரின் பின்புலம் என்ன, அவரது கனவு ஏன் நிறைவேறாமல் போனது, ராயப்பன் என்ன ஆனார், வீராங்கனைகள் மைக்கேலை கோச்சாக ஏற்றுக்கொண்டார்களா, அந்த அணியால் வெற்றி வாகை சூட முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அட்லீ- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் 'பிகில்'. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு விஜய் ரசிகரே எடுத்த படம் இது. ஆனால் வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் அம்சங்கள் இப்படத்தில் கொஞ்சம் மிஸ் ஆகின்றன.

ராயப்பன், மைக்கேல் என்று இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், காவி வேட்டி, கலர் சட்டை என்று 60 வயதை நெருங்கும் கேங்ஸ்டர் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் கொஞ்சம் பொருந்துகிறார். ஆனால், அதற்கான உடல் மொழி எதுவும் இல்லை. திக்கிப் பேசுதல், குரல் வெளிப்பாட்டில் மெதுவான போக்கைக் கடைப்பிடித்தல் ஆகியவை ஓரளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கின்றன. எமோஷன் காட்சிகளில் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகன் மைக்கேலை நினைத்துப் பெருமைப்படும் போதும், கப் (கோப்பை) முக்கியம் என்று சொல்லும்போதும் ரவுடிகளைப் பந்தாடும்போதும் ராயப்பன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.

விளையாட்டில் குறிக்கோளாக இருக்கும் பிகிலின் எனர்ஜி ஆச்சர்யப்படுத்துகிறது. மைக்கேல் கதாபாத்திரத்தில் விஜய்யின் புத்திசாலித்தனம் அசர வைக்கிறது. தான் யார் என்பதை புரியவைப்பது, நயன் மீதான காதலை வெளிப்படுத்துவது, ஏரியா மக்களின் பாசத்தைப் பெறுவது என மைக்கேல் இளமைப் பட்டாசு. ரெபா மோனிகா ஜானிடம் ஒரு கதையைச் சொல்லும்போது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், வழக்கமான விஜய்யின் டான்ஸ், நகைச்சுவை உணர்வு இதில் தேடிப் பார்த்தாலும் தென்படவில்லை.

படத்தில் நயன்தாரா இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவுதான். வர்ஷா பொல்லம்மாவின் கணவனிடம் பெண்களின் கனவுகள் குறித்துப் பேசும் இடத்தில் மட்டுமே நயன் தனித்துத் தெரிகிறார். மற்றபடி டூயட் பாடிவிட்டு, கூட்டத்தில் ஒருத்தியாகவே வந்து நாயகி கடமையை நிறைவேற்றுகிறார்.

நாயகனை மையப்படுத்திய படம் என்பதால் படத்தில் வேறு யாருக்கும் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதையும் மீறி கதைக்களத்தின் முக்கியத் திருப்பம் என்பதால் கதிர் அழுத்தமாக வெளிப்படுகிறார். யோகி பாபு காமெடியில் சிக்ஸர் அடிக்கிறார். தன் ஒன்லைனர்களால் சிரிப்பு மத்தாப்பைக் கொளுத்துகிறார். ஜார்ஜ் போகிற போக்கில் தன் இருப்பைப் பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஷெராஃப் வழக்கமும் பழக்கமுமான வில்லனாக வந்து போகிறார்.

ஆனந்த்ராஜ், மனோபாலா, தேவதர்ஷினி, ரோகிணி, சௌந்தர்ராஜா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ரமா, எல்.எம்.விஜயன் ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளில் இந்துஜா மிகை நடிப்பில் உறுத்துகிறார். தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயரும், அனிதா கதாபாத்திரத்தில் நடித்த ரெபா மோனிகா ஜானும் இயல்பான நடிப்பில் மின்னுகிறார்கள். பாண்டியம்மாவாக வரும் இந்திரஜா ஷங்கர் அசால்ட்டாக அப்ளாஸ் அள்ளுகிறார்.

கால்பந்தாட்டக் களத்தின் அழகியலையும் டான்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. வெறித்தனம், சிங்கப்பெண்ணே பாடல்களில் களத்துக்கு வலு சேர்க்கும் ரஹ்மான் கால்பந்தாட்டம் தொடர்பான பின்னணி இசையில் ரம்மியம் சேர்க்கிறார்.

படத்தின் பெரிய பிளஸ் விஜய்தான். படத்தின் அழுத்தத்துக்கு ரெபா மோனிகாவின் பின் கதை அழுத்தம் சேர்க்கிறது. வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதையும் அக்கறையுடன் பதிவு செய்கிறது.

படத்தின் நீளம் பெரிய பிரச்சினை. எடிட்டர் ரூபன் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். படத்தின் எந்தக் கதாபாத்திரக் கட்டமைப்பும் முழுமையாக இல்லை. படத்தின் பிரதான பலவீனம் இதுவே. இயக்குநர் அட்லி கேரக்டர் ஸ்கெட்ச்சில் கவனம் செலுத்தியிருக்கலாம். கேங்ஸ்டர் படமா, விளையாட்டை மையமாகக் கொண்ட படமா என்ற குழப்பம் இயக்குநருக்கு வந்திருக்கிறது. அது திரைக்கதையிலும் எதிரொலிக்கிறது.

மகளிர் கால்பந்து அணிக்கும் கோச் விஜய்க்கும் இடையே உள்ள முரண்களை சரிசெய்த விதம் ரொம்பவே சாதாரணமாக இருக்கிறது. மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகளின் பின்புலமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இருவரின் பின்னணி மட்டுமே ஓரளவு சொல்லப்படுகிறது. தமிழ்ப் படங்கள், பாலிவுட் படங்கள் என பல படங்களின் காட்சி சாயல்கள் இந்தப் படத்திலும் உள்ளன. படத்தின் எந்தக் காட்சியிலும் புதுமை இல்லாதது பெருங்குறை.

பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பதைப் போதிக்கும் வழக்கமான வன்முறையை மட்டும் தீர்வாகச் சொல்லவில்லை என்பது படத்தின் ஆறுதல். கல்வி, விளையாட்டை தீர்வுகளாகக் கொண்டு பெண்களைக் கவுரவப்படுத்தும் நோக்கில் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உறுதுணை புரிய வேண்டும் என்ற கருத்தைச் சொன்ன விதத்தில் மட்டும் 'பிகில்' ஓங்கி ஒலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x