

திருப்பதியில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நேற்று (அக்டோபர் 24) சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா.
நயன்தாரா நடிப்பில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார் விஜய்.
‘பரியேறும் பெருமாள்’ கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான் என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்பா (ராயப்பன்) - மகன் (மைக்கேல்) என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய். மகன் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘பிகில்’ வெளியாகியுள்ளது. மேலும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா என வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளிலும் இந்தப் படம் ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் வெற்றிபெற வேண்டி நேற்று (அக்டோபர் 24) அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் நயன்தாரா. அவருடன் காதலர் விக்னேஷ் சிவனும் உடனிருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த நயன்தாராவிடம், ‘விரைவில் திருமணமா?’ என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். புன்னகையை மட்டுமே அதற்குப் பதிலாகத் தந்து சென்றார் நயன்தாரா.