

விஜய் - அட்லீ கூட்டணியில் நாளை ரிலீஸாகவுள்ள படம் ‘பிகில்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, வர்மா பொல்லம்மா, யோகி பாபு, ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய்.
இந்தப் படத்தின் புரமோஷனுக்காக ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார் அட்லீ. அவற்றில், சில கேள்வி - பதில்கள் இங்கே...
கேள்வி: இன்னைக்கு மும்பையில் படம் பார்த்துட்டோம்னு யார் யாரோ சொல்றாங்க, விமர்சனம் பண்றாங்க. ப்ரைவேட் ஷோ போட்டீங்களா?
அட்லீ: படத்தின் காப்பியே இன்னைக்குக் காலையில்தான் கொடுத்திருக்கோம். கேடிஎம் நாளை விடியற்காலையில்தான் கொடுப்போம். அதற்குள் எப்படிப் பார்த்திருக்க முடியும்? இதற்கெல்லாம் ஒரே வழி, எதிர்மறை விஷயங்களைப் புறக்கணிப்பதுதான்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த விஜய் படம் எது? (நீங்கள் இயக்கிய படங்கள் தவிர்த்து)
அட்லீ: கில்லி.
கேள்வி: ‘பிகில்’ படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த காட்சி எது? நீங்க தளபதியை ரசித்து ரசித்து எடுத்த காட்சி எது?
அட்லீ: ரயில்வே ஸ்டேஷனில் தொடங்கி இடைவேளை வரை உள்ள காட்சி. நாளைக்குப் படம் பார்த்துட்டு நீங்க பதில் சொல்லுங்க நண்பா.
கேள்வி: ஒவ்வொரு காரணத்துக்காக ஒவ்வொருத்தருக்கும் விஜய்யைப் பிடிக்கும். உங்களுக்கு விஜய்யைப் பிடிக்க என்ன காரணம்?
அட்லீ: வெறுப்பைக் காட்டாமல், அன்பு ஒன்றை மட்டுமே காட்டத் தெரிந்த உண்மையான மனிதன்.
கேள்வி: ரஜினியுடன் சேர்ந்து எப்போ படம் பண்ணப் போறீங்க?
அட்லீ: நான் தயாராத்தான் இருக்கேன் ப்ரோ. மாஸ் பண்றோம். (ரஜினியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு) எப்போதுமே உங்களைப் பிடிக்கும் தலைவா.
கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்? விளையாட்டுப் படத்துக்கான பாடல்களை அவரிடமிருந்து பெற்ற அனுபவம்?
அட்லீ: உண்மையில் வேற லெவல் அனுபவம் நண்பா. நீங்க இதுவரைக்கும் கேட்ட பாடல்கள் தவிர, படத்தில் இன்னும் 2 எமோஷனல் பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்கள் வரும் இடங்கள் வேற லெவல் வெறித்தனம். எதிர்பாராததை எதிர்பாருங்கள்.