Published : 24 Oct 2019 02:25 PM
Last Updated : 24 Oct 2019 02:25 PM

’சரோசா... குப்பை கொட்றியா... கொட்டுகொட்டு’ டயலாக்;  திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் 4 : 40 கேள்விகள்... 40 பதில்கள்

வி.ராம்ஜி


ஒரு படத்தின் போஸ்டரே கூட போதும்... அதை வைத்து ஒரு சினிமாவே பண்ணிவிடலாம்... என்று சொல்கிறார் இயக்குநர் கே.பாக்யராஜ். அதனால்தான் அவர் திரைக்கதை மன்னர் என்று கொண்டாடப்படுகிறார்.


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், முதன் முதலாக இயக்கிய படம் ’சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படத்தை இயக்கி 40 வருடங்களாகிவிட்டன.


இதையொட்டி, அவரை கெளரவிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ சார்பாக அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

மேலும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பாக்யராஜ் பிரத்யேக வீடியோப் பேட்டி அளித்தார்.


அதில் அவர் தெரிவித்ததாவது :


சின்ன வயசுல ஜெமினி கணேசன் நடிச்ச ‘ராமு’ படத்தைப் பாத்தது நினைவிருக்கு. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிக்கு அப்போ பெண் ரசிகைகள் அதிகம். இந்தப் படத்தோட போஸ்டர் என்னை ரொம்பவே பாதிச்சிச்சு.


பின்னாடி, இந்த போஸ்டர்தான், ‘முந்தானை முடிச்சு’ கதை பண்றதுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு.
‘ராமு’ படத்துல, ஜெமினி கணேசன் ஒரு ஜோல்னாப் பை மாட்டிக்கிட்டு, கையில பையனைப் புடிச்சிக்கிட்டு நிப்பாரு. நாலுநாள் தாடியும் அதுவுமா, ஜெமினியைப் பாக்கவே பாவமா, சோகமா இருக்கும்.


‘அய்யய்யோ... பொண்டாட்டி இல்லாம பையனோட பாவமா இருக்காரு ஜெமினின்னு பெண்கள் பேசிக்கிட்டது ஞாபகம் இருக்கு. லேடீஸ்க்கு அந்தப் படத்தின் மேல செம இன்வால்வ்மெண்ட் ஆகிருச்சு.

பின்னாடி, ‘முந்தானை முடிச்சு’ படம் பண்ணும் போது, பழைய படங்கள் என்னெல்லாம் பண்ணிருக்காங்க, எதுமாதிரி பண்ணிருக்காங்கன்னு யோசிக்கும்போது, சின்ன வயசுல, ‘ராமு’ படம் போஸ்டர் பாத்தது ஞாபகம் வந்துச்சு.


‘நாமளும், ஜெமினி மாதிரி ஒரு பையனோட நின்னா எப்படி இருக்கும்? நம்ம படத்துக்கும் பெண்கள் ஆதரவு இருக்கே’ன்னு யோசிச்சேன். ஜெமினி கொஞ்சம் வயசானவர். அதனால இப்படி வளர்ந்த பையன் இருந்தது சரியா இருந்துச்சு. ஆனா நமக்கு அப்படி செட்டாகாது. அதனால கைக்குழந்தையா மாத்தி பண்ணினா என்னன்னு தோணுச்சு.


அதுக்குப் பிறகு, அதை அப்படியே டெவலப் பண்ணி கதை பண்ணினேன். ஆனா அந்தக் கதையே வேற. குழந்தையைத் தத்தெடுத்துட்டு, அந்த ஊருக்கு வருவேன். அது என் குழந்தை இல்ல. நான் வேலைக்கு இண்டர்வியூ போற இடத்துல அந்த ஓணர், ஒரு விடோயர். சின்னவயசுல, பொண்டாட்டியை இழந்து, தன்னோட பெண் குழந்தையை வளர்த்திருப்பாரு. அதனால, நாமளும் அப்படி விடோயர் மாதிரி, கைக்குழந்தையோடெல்லாம் போனா, ஒரு ஸிம்பதி வரும், வேலை கிடைக்கும்னு போயிருப்பேன். அப்புறம், அவரோட பொண்ணுக்கு ஹீரோ மேல லவ் வரும். இடைவேளைல உண்மை தெரிஞ்சு போயிரும்.

அதுக்குள்ளே கல்யாணமாகியிருக்கும். அந்த விடோயர், துப்பாக்கியை எடுத்துக்கிட்டு சுட வருவாருன்னு கதை பண்ணிருந்தேன். அப்புறம்... மறுநாள் நானே வந்து அஸிஸ்டெண்டுங்ககிட்ட, ’அந்தக் கதை சரியா வரலய்யா. கொஞ்சம் மாத்திக்குவோம். ஒரிஜினலா விடோயர்னு வைச்சுக்கலாம். அப்புறம், ஊட்டி எஸ்டேட்னு வைச்சுக்கவேணாம். கிராமமா இருக்கட்டும்னு சொன்னேன். அதுதான் ‘முந்தானை முடிச்சு’.
ஆனா இந்தக் கதையை, கே.எஸ்.ஜி. தன்னோட கதைன்னு சொன்னார். ஏதேதோ சொன்னார். இதேபோல, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்துக்கும் இப்படித்தான் சொன்னாங்க. எல்லாமே ஒரு ஸ்பார்க்லேருந்து வர்றதுதான். ஒரு இன்ஸ்பிரேஷன் தான்’’ என்றார்.
‘சுவரில்லாத சித்திரங்கள்’ கூட இப்படியொரு இன்ஸ்பிரேஷன் தானா சார்’ என்று கேட்டேன்.


‘அது ஒரிஜினலாவே ஊர்ல அப்படியொரு குடும்பம் இருந்துச்சு. புருஷன் ஓடிப் போன குடும்பம். டெய்லர் அம்மா. அவங்களுக்குப் பசங்க. வயசுப் பொண்ணுங்க. அந்த அம்மா கொஞ்சம் இளமையா இருக்கறதால, ஊர்ல எல்லாருமே அவங்களை ஒருமாதிரி பாப்பாங்க. பேசுவாங்க. நான் இதையெல்லாம் வைச்சிக்கிட்டு, கொஞ்சம் கற்பனையும் சேர்த்து கதையாப் பண்ணினேன்.


அதேபோல படத்துல வர்ற டெய்லர் காளியண்ணன் கேரக்டர் நிஜம். எங்க ஊர்ல, எங்க ஒர்க் ஷாப் பக்கத்துல, பாரதிபுரத்துல, காளியண்ணன்னு டெய்லர் கடை வைச்சிருந்தார். நான் அங்கே அடிக்கடி உக்கார்ந்திருப்பேன். அவர் எப்பவுமே டபுள் மீனிங்க்ல பேசுவாரு. ஆனா யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க.


‘என்னய்யா... ஜாக்கெட்டை இப்படி டைட்டா தைச்சு வைச்சிருக்கேன்னு கேட்டா... ’என்னம்மா இது. அப்ப வூட்டுக்காரரு இல்ல. அளவெடுத்தது. இப்ப வந்துட்டாரு. டைட்டா இல்லாமலா இருக்கும்’னு சொல்லுவாரு. பொம்பளைங்க கோபமா இருக்கறவங்க கூட, பொசுக்குன்னு வாயை மூடி சிரிச்சிக்கிட்டே போயிருவாங்க. இதெல்லாம் பாக்க காமெடியா இருக்கும். அதனாலதான் கவுண்டமணி கேரக்டரை அந்த காளியண்ணன் கேரக்டரா வைச்சேன்.


அப்புறம், கடைல காஜாஷெரீப் அப்படின்னெல்லாம் சேர்த்து வைச்சிருந்தேன். அதுல கவுண்டமணி பேசுற ‘சரோசா... குப்பை கொட்றியா... கொட்டு கொட்டு’ங்கற வசனம் செம ஹிட்டு.


காஜாஷெரீப்பை, ‘புதிய வார்ப்புகள்’ படத்துலதான் பாத்தேன். ரதியோட தம்பியா நடிச்சிருப்பார். அந்தப் பழக்கத்துல, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துல பயன்படுத்திக்கிட்டேன்’’ என்றார்.


‘’’சுவரில்லாத சித்திரங்கள்’ பேசும் போது இரண்டு கேள்வி. முதல் கேள்வி... ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்று நெகடீவ் டைட்டில். அப்புறம் ‘ஒரு கை ஓசை’ன்னு டைட்டில். பிறகு, ‘மெளன கீதங்கள்’னு நெகடீவ் டைட்டில். எப்படி சார் இப்படி?’


‘’இல்லீங்க. இதெல்லாம் யதார்த்தமா அமைஞ்சதுதான். அந்தப் படத்துல, அஸிஸ்டெண்டா வந்த பையன் ‘சுவரில்லாத சித்திரங்கள்’னு சொன்னான். பிடிச்சிருந்துச்சு. ‘ஒரு கை ஓசை’ டைட்டில் நான் வைச்சேன். ‘மெளன கீதங்கள்’ அப்படி அமைஞ்சுச்சு. ‘இன்று போய் நாளை வா’வும் யதார்த்தமா அமைஞ்சதுதான். இதுல எந்தப் பிளானும் இல்ல.


‘விடியும் வரை காத்திரு’ மட்டும், ஒரு இங்கிலீஷ் படத் தாக்கத்துல வைச்சேன்.

இன்னும் தொடரும்...

* ‘விடியும் வரை காத்திரு’ டைட்டிலுக்கு இங்கிலீஷ் பட இன்ஸ்பிரேஷன்

* ’விடியும் வரை’ காத்திரு’ நன்றியுணர்வின் வெளிப்பாடுதான்

* தூயவன் சாருக்கு செய்த உதவி

* ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படமும் அப்படித்தான்.

இதற்கெல்லாம் விரிவாகப் பதில் சொல்கிறார் பாக்யராஜ்.

இயக்குநர் கே.பாக்யராஜ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த முழு வீடியோ பேட்டியைக் காண :


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x