

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'பிகில்' அவரது முந்தைய படங்களின் வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்தே கதை சர்ச்சை விஷயம் தொடங்கிவிட்டது. தற்போது படம் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் கதை தொடர்பான வழக்குகள் முடியவில்லை.
ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பெருவாரியான திரையரங்குகளில் 'பிகில்' வெளியாகவுள்ளது. விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சுமார் 180 கோடி ரூபாய் (வட்டி சேர்க்காமல்) பொருட்செலவில் 'பிகில்' படத்தைத் தயாரித்து, 200 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்துள்ளது படக்குழு. தமிழக விநியோக உரிமையை சுமார் 83 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் உள்ள 900 திரையரங்குகளில், 500 - 550 திரையரங்குகள் வரை 'பிகில்' வெளியாக வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் விஜய் படங்களின் முந்தைய சாதனை
முதல் நாள் மொத்த வசூலில் 'மெர்சல்' 23.7 கோடி ரூபாயும், 'சர்கார்' 31.7 கோடி ரூபாயும் வசூல் செய்தது. தமிழ்ப் படங்களின் முதல் நாள் வசூலில் இந்த இரண்டு படங்களின் சாதனையை இன்னும் எந்தவொரு படமும் முறியடிக்கவில்லை. மொத்த வசூலில் 'பாகுபலி 2' படம் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் சாதனை நிகழ்த்தியது. தமிழ்ப் படங்களில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படம் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இதுவரை இந்த சாதனையை எந்தவொரு தமிழ்ப் படமும் முறியடிக்கவில்லை.
'பிகில்' படத்தின் தமிழக உரிமை 83 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது. இந்த 84 கோடி ரூபாய் கைக்கு வர வேண்டுமானால், தமிழகத்தில் சுமார் 140 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலாக வேண்டும். 'பிகில்' படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த வசூலைத் தொடும் என விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். இந்த வசூலைத் தொட்டால் மட்டுமே, போட்ட பணம் கைக்கு வரும். இதைத் தாண்டி வசூல் செய்தால்தான் படத்துக்கு லாபமே வரும்.
உலக அளவில் விஜய் படங்களின் சாதனைகள்
உலக அளவில் வசூல் அதிகமான படங்களில் தமிழில் ரஜினிதான் முதல் 3 இடங்களில் இருக்கிறார். அவரது '2.0', ’எந்திரன்’ மற்றும் 'கபாலி' ஆகிய படங்கள் வரிசையில் உள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து 'மெர்சல்' மற்றும் 'சர்கார்' ஆகிய விஜய் படங்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ரஜினி நடித்த 'பேட்ட' படமும், அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் இருக்கின்றன.
'பிகில்' படத்தின் அனைத்து மொழி வியாபாரமும் சேர்த்து ரூ.200 கோடி அளவுக்குச் செய்திருப்பதாக ஏஜிஎஸ் நிறுவனத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இதன்படி பார்த்தால், உலக அளவில் மொத்த வசூல் பட்டியல் வரிசையில் 'பிகில்' படத்தின் வசூல் இடம்பெற்றால் மட்டுமே முதலீடு செய்யப்பட்ட பணம் கைக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
இது சாத்தியமா?
'சர்கார்' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்கள் எவ்விதப் போட்டியுமின்றி வெளியானதால் மட்டுமே, தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் செய்தது என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அதிலும், இரண்டு படத்துக்கும் ஏற்பட்ட சர்ச்சையும் ஒரு முக்கியமான காரணம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், 'பிகில்' படம் அப்படியல்ல. 'கைதி' படம் போட்டிக்கு வெளியாகிறது. அந்தப் படமும் கணிசமான வசூல் செய்யும். இதனால் இந்த அளவுக்கு வசூல் செய்ய வேண்டும், படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தற்போது இருக்கும் எதிர்பார்ப்பில், விஜய் மீண்டும் வசூல் சாதனை புரிவார் என்று நம்புகிறார்கள் விநியோகஸ்தர்கள்.