உரிமைக்காக விரைவில் வழக்கு; உண்மையும் நீதியும் வென்றே தீரும்: கே.பி.செல்வா தகவல்

உரிமைக்காக விரைவில் வழக்கு; உண்மையும் நீதியும் வென்றே தீரும்: கே.பி.செல்வா தகவல்
Updated on
1 min read

உரிமைக்காக விரைவில் வழக்குத் தொடரவுள்ளதாகவும், உண்மையும் நீதியும் வென்றே தீரும் எனவும் கே.பி.செல்வா தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பிகில்'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்றும் படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் உதவி இயக்குநர் கே.பி.செல்வா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்குத் தொடர அனுமதி கோரியும் செல்வா தரப்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.

அதனைத் தொடர்ந்து கே.பி.செல்வா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனால் 'பிகில்' படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் ஏற்படாது என்றாலும், தொடர்ச்சியாக இந்த வழக்குத் தொடரவுள்ளது.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக கே.வி.செல்வா தனது ஃபேஸ்புக் பதிவில், "சிட்டி சிவில் கோர்ட்டில் வந்த தீர்ப்பு தவறானது என்றும், புது வழக்குப் போடவே முடியாது என்று சொன்னது பொய் என நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது. இதுவே எங்களோட முதல் சிறிய வெற்றியாகவே கருதுகிறோம். மேலும் என்னோட உரிமைக்காக விரைவில் வழக்குத் தொடரவுள்ளேன். இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், என்னோட வழக்கறிஞர்கள் பாலாஜி குமார், சதிஷ் குமார் மற்றும் சந்துரு ஆகியோருக்கு என்னோட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையும், நீதியும் வென்றே தீரும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in