

'கைதி' வழக்கமான ஆக்ஷன் படம் கிடையாது என்று அந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு, தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
'பிகில்' படத்துக்குப் போட்டியாக இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்தப் படம் உருவான கதையின் ரகசியத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
"சிறிய பட்ஜெட்டில், சின்ன நடிகர்களை வைத்து 'மாநகரம்' எடுத்தோம். ஆனால் அது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்துக்குப் பின், தொடர்ந்து துறையில் இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அடுத்தடுத்து படங்கள் கையெழுத்திடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தேன். 'மாநகரம்' தயாரிப்பாளர்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருந்ததால், புதிய கதைக்கான வேலைகளை ஆரம்பித்தேன்.
ஆனால் அது பாதி முடிந்த நேரத்திலேயே, துறைக்கு வந்த இவ்வளவு சீக்கிரத்தில் அது எனக்கு ஒத்துவராது என்பது புரிந்தது. அதை மாற்றி எழுதலாம் என்று ஓரமாக வைத்துவிட்டேன். இன்னொரு கதை எழுதினேன். ஆனால் அதற்கான நடிகர்கள் சரியாகக் கிடைக்கவில்லை.
நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். அது என் கவனத்தை ஈர்த்தது. அதை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். என் நண்பர்களுடன் உரையாடினேன். அவர்கள் காட்டிய ஆர்வம் என்னை உற்சாகப்படுத்தியது. அதுதான் 'கைதி'யாக மாறியது. கார்த்தி படத்தில் நடிக்கிறார் என்றவுடன் படம் இன்னும் பிரம்மாண்டமானது.
கார்த்தி சார் 'மாநகரம்' பார்த்திருந்தார். அதனால்தான் அவருக்கு என்னிடம் பணிபுரிய விருப்பம் இருந்தது. என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். எனக்கும் அவர் நடிப்பின் பலம் தெரியும். எனவே எங்களிடையே நல்ல புரிதல் இருந்தது.
இந்தப் படத்தின் திரைக்கதை எழுதும் வேலை எனக்குப் புதிதாக இருந்தது. வசனங்கள் குறைவாகவும், வர்ணனை அதிகமாகவும் இருந்தது. எனது இறுதி திரைக்கதை வடிவம் 45 பக்கங்கள் வரை இருந்தது. நான் எஸ்.ஆர்.பிரபுவைச் சந்தித்தபோது, படம் இரண்டரை மணிநேரம் வரை இருக்கும் என்றேன். திரைக்கதை வடிவத்தின் அளவைப் பார்த்து அவர் குழம்பிப் போனார்.
கார்த்தி நடிக்க ஒப்பந்தமான பின் இன்னும் சற்று விரிவாக்க வேண்டியிருந்தது. அதனால் பொன் பார்த்திபனை எனக்கு வசன உதவிக்காக நாடினேன். 'விருமாண்டி’ மற்றும் 'டை ஹார்ட்’ படங்களுக்கு என் படத்தில் நன்றி தெரிவித்திருக்கிறேன். கதாபாத்திரங்களோ, நடிப்போ, 'விருமாண்டி’ எனக்கு மிகப்பெரிய தாக்கமாக இருந்தது.
'கைதி’ படத்தில் பாடல்களோ, நாயகியோ இல்லை என்பதால் படம் இரண்டு மணிநேரத்துக்குள் இருக்கும் என்று நினைப்பார்கள். அப்படித்தான் அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தப் படமும் ஓர் இரவில் நடக்கும் கதை. அதை ஒரு குறிப்பிட்ட கால நேரத்துக்குள் சொல்ல வேண்டியிருந்தது.
'மாநகரம்’ படத்துக்குப் பின் ரசிகர்கள் மீதான என் மரியாதை பல மடங்கு அதிகரித்துவிட்டது. கதைக்களனும், காட்சியமைப்பும் சரியாக இருந்தால் படம் எவ்வளவு நேரம் ஓடினாலும் பார்க்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். 'கைதி’ அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்காகக் கண்டிப்பாகப் பேசப்படும்.
'கைதி’யில் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அதைச் சம்பிரதாயமாகச் சேர்க்கவில்லை. ஒவ்வொரு சண்டைக்கும் காரணம் இருக்கிறது. பின் கதை இருக்கிறது. கதாபாத்திரங்களை அதன் தன்மையுடன் அணுகும்போதுதான் சரியான வெளிப்பாடு கிடைக்கும். அப்படிப் பார்க்கையில் 'கைதி’ வழக்கமான ஆக்ஷன் படம் கிடையாது.
'கைதி’ வெற்றி பெற்றால் அது லோகேஷ் என்ற இயக்குநருக்குக் கிடைத்த வெற்றியே. ஏனென்றால் நான் எழுதியதைப் படமாகக் கொண்டு வருவதுதான் கடினமாக இருந்தது. நாம் எழுதியதுதான் திரையில் வரும். ஆனால் சில இடங்களில் அங்கிருந்த கலைஞர்களோடு சில விஷயங்கள் படப்பிடிப்பில் மேம்படுத்தப்பட்டது. எனவே லோகேஷ் என்ற இயக்குநருக்கு நான் கூடுதல் மதிப்பெண் தருவேன்''.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.