இணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு

இணையக் கிண்டல்கள்: சேரன் - விவேக் கருத்துப் பகிர்வு
Updated on
1 min read

இணையக் கிண்டல்கள் தொடர்பாக இயக்குநர் சேரன் மற்றும் நடிகர் விவேக் ட்விட்டரில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததால், மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார் இயக்குநர் சேரன். ஆனாலும் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்வுகள் தொடர்பாகப் பலரும் தன்னை ஆபாசமாகத் திட்டி வருவதைக் கடுமையாக விமர்சித்தார் சேரன். மேலும், தொடர்ச்சியாகப் பலரும் திட்டி வருவதை முன்னிட்டு, இணையக் கிண்டல்களுக்கு எதிராகப் பல பதிவுகளை வெளியிட்டார்.

அவ்வாறு சேரன் வெளியிட்ட பதிவுகளுக்கு, பலரும் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர். அந்தப் பதிவுகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பதிவில், "எப்போதும் உயர்ந்த நேர்மறை மற்றும் மாணவர் இளையோரை ஊக்குவிக்கும் பதிவுகளே இந்த சமுதாயத்திற்கு நன்று. இதுவே என் கருத்து.

ஒரு ஆபாசத்துக்கு இன்னொரு ஆபாசம் பதில் என்றால் சமூகமே அழுகி, நாற்றம் அடிக்கும் குப்பைமேடு ஆகிவிடும். அமைதியாக அதைக் கடந்து சென்றால், அது மக்கி மண்ணாகி விடும். அனைத்து எதிர்மறை சிந்தனைகளும், மரணத்தைச் சந்திக்கும். நேர்மறை மட்டுமே நல்ல சமூகத்தை வளர்க்கும்.

சேரன் சார், நீங்கள் மிகச்சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜித் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினைப் பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள்” என்று தெரிவித்தார் விவேக்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக சேரன், "மிக்க நன்றி விவேக் சார். எல்லோரும் பயன்படுத்தும் தளம் என்பதால் இந்த முன்னெடுப்பு. உங்களைப் போன்றோரின் ஆதரவு அது போன்றவர்களை யோசிக்க வைக்கும். மகிழ்ச்சி சார். நிறைய பெண்களோட பக்கங்களில் ஆபாச வார்த்தைகள், படங்கள்னு பதிவிடுற பழக்கம் உள்ளவர்களுக்கு. அவங்க வீட்டிலும் பெண்கள் இருக்காங்கன்னு சொல்றதுக்கு.

நம்ம காரில் போயிடுறோம் சார். இன்னும் சைக்கிள், பைக் மற்றும் நடந்துபோகிற மக்கள் இருக்காங்களே. நாங்கள் யாருக்கும் பதிலுக்குப் பதில் பேசச் சொல்லவில்லை. அதைச் செய்யாதீர்கள் என்று சொல்றோம். மரம் இல்லைன்னு நிறையப் பேர் சொன்னாங்க... நீங்க மரக்கன்று நட்டீங்களே.. அது போல சார்” என்று தெரிவித்துள்ளார் சேரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in