Published : 22 Oct 2019 03:05 PM
Last Updated : 22 Oct 2019 03:05 PM

’’டூரிங் டாக்கீஸ்ல ‘மன்னாதிமன்னன்’ பாக்கும் போது நடந்த கலாட்டா!’’ - திரைக்கதை மன்னன் பாக்யராஜ் 3 – 40 கேள்விகள் 40 பதில்கள்

வி.ராம்ஜி

ஒவ்வொரு கேள்வியையும் கேட்டு முடித்ததும் இடைவெளி இல்லாமல் வந்து விழுகின்றன பதில்கள். ‘அதுல பாத்தீங்கன்னா...’ என்று அவர் சொல்லிவிட்டு, விவரிப்பதே அழகு. சரி... பதிலை சொல்லிவிட்டார் என்று நினைக்கும் போது, அந்தக் கேள்விக்குத் தொடர்பான, சொல்லிவிட்ட பதிலுக்குத் தொடர்பான சம்பவங்களையும் அடுக்குகிறார் பாக்யராஜ். அப்படியான பதில் சொல்லலில், ரசிகர்கள் மீது, ஒரு பேட்டியின் மீது, அவருக்கிருக்கிற ஆர்வமும் ஆழ்ந்த ஈடுபாடும் தெரிகிறது.

’சுவரில்லாத சித்திரங்கள்’ பாக்யராஜ் இயக்கிய முதல் படம். இந்தப் படம், 1979ம் ஆண்டு வெளியானது. பாக்யராஜ் முதல் படத்தை இயக்கிய வகையில், இது அவர் திரையுலகிறகு வந்து 40 வது ஆண்டு.


இதையொட்டி, பாக்யராஜுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.


மேலும் இதுகுறித்து, கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு விரிவான வீடியோ பேட்டி அளித்தார்.


அதில் அவர் கூறியதாவது:
’’வெள்ளாங்கோவில்ல, மூணாவது வரைக்கும் படிச்சேன். அங்கே அவ்ளோதான் இருந்துச்சு. அப்புறமா, கோயம்புத்தூர்ல தாத்தா வீட்ல இருந்துதான் படிச்சேன். லீவுக்குத்தான் வெள்ளாங்கோவில் வருவேன்.


வெள்ளாங்கோவில்ல, மூணு மணி கார் வந்துருச்சா, நாலரை மணி கார் வந்துருச்சான்னுதான் பேசிக்குவாங்க. கிழக்கால போற பஸ் எப்ப வரும், மேற்கால போற பஸ் போயிருச்சான்னுதான் கேப்பாங்க. கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க, எஸ் ஆர் டி போயிருச்சா, கோபால் போயிருச்சான்னு கேப்பாங்க.
அப்பதான் எனக்கு காலைல எட்டரைக்கு ஒண்ணு, எட்டரையை விட்டா 11.30க்கு ஒண்ணு, மதியம் மூணரைக்கு ஒண்ணுன்னு தெரிஞ்சுச்சு.
அதேபோல டூரிங் தியேட்டர்ல் பாக்கணுனா, ஆறேழு கிலோமீட்டர் போகணும். நல்ல தியேட்டர்னா, கோபிசெட்டிப்பாளையத்துக்குத்தான் போகணும்.அது, எங்க ஊர்லேருந்து 17 கி.மீ. தூரம்.


அம்மாகிட்ட கார் இருந்துச்சு. கோபிக்கு படத்துக்குப் போறதா இருந்தா, கார்ல போயிருவோம். அப்புறம், எங்க ஊர்லயே டெண்ட் கொட்டாய் வந்துருச்சு. நாங்க லீவுக்குப் போன சமயத்துல தியேட்டர் இருந்தது எங்களுக்கு லக் தான். இதுல என்னன்னா... ரெண்டுநாளைக்கு ஒரு படம் மாத்திக்கிட்டே இருப்பாங்க. எம்ஜிஆர் படம்னா மூணு நாலு நாள் கூட ஓடும். இதுலயும் சரி... பக்கத்து ஊர்கள்லயும் சரி, கோபியிலயும் சரி... நிறைய படங்கள் பாத்திருக்கேன். முதன்முதல்ல பாத்த படம்னு எதுகேட்டா, சொல்லத்தெரியலை. அப்படி நினைவுல இல்லை.


ஆனா, சில படங்கள் ஞாபகத்துல இருக்கு. ஏன்னா, அப்போ சண்டைலாம் நடந்துச்சு. எங்க அத்தைங்க என்ன செய்வாங்க தெரியுமா? எம்ஜிஆர் படத்துக்கு லேடீஸ் கூட்டம் பயங்கரமா இருக்கும். ஆண்கள் கூட்டமும் அதிகமாத்தான் இருக்கும்.


என்னை அத்தைங்க படத்துக் கூட்டிட்டுப் போவாங்க. லேடீஸ் கூட்டத்துல நான் உள்ளே நுழைஞ்சு டிக்கெட் எடுத்துக்கிட்டு வரணும். சின்னப்பையன்ங்கறதால, க்யூல நிக்காம போனா, டிக்கெட் எடுக்க விட்ருவாங்க. டிக்கெட்டும் குடுத்துருவாங்க. இந்த டெக்னிக் எங்க அத்தைங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னா, க்யூல நிக்கிறவங்க இன்னும் எவ்ளோ விவரமா இருப்பாங்க. அவங்க என்னைப் பாத்துட்டு, ‘டேய்... எத்தினி டிக்கெட்டுடா வாங்கப் போறே?’ன்னு கேப்பாங்க. ‘ஒண்ணுதான்’ன்னு சொல்லுவேன். ‘பொய்யா சொல்றே. ஒருத்தனுக்கு எதுக்குடா மூணு டிக்கெட்னு கேப்பாங்க. ’உங்க வீட்டு பொம்பளைங்க மட்டும் அறிவாளிகளாக்கும்’னு சொல்லி, ‘இந்தப் பையனுக்கு மட்டும் ஒரேயொரு டிக்கெட் குடுங்க’ன்னு சொல்லி... ஏக கலாட்டாவா இருக்கும்.


அப்படிப் பாத்த படம்... ‘மன்னாதி மன்னன்’. நல்லா ஞாபகம் இருக்கு. எம்ஜிஆர் படம் பாக்கும்போது, அவர் சண்டை போடும் போது, நம்மளயும் அறியாம, டம்முடும்முன்னு பக்கத்துல இருக்கறவங்களைக் குத்திருவோமில்லியா? அப்படி நடந்து, அங்கே இருந்த பொம்பளைங்களாம், ‘என்னத்த புள்ளையை பெத்து வைச்சிருக்கே?’ன்னு திட்டி, அப்புறம் அந்தப் பக்கமும் இல்லாம, இந்தப் பக்கமும் இல்லாம, நடுவுல நடந்து போறதுக்கான பாதைல என்னை உக்கார வைச்சிட்டாங்க. இதெல்லாம் ஞாபகம் இருக்கு.


பொம்பளைங்க மட்டும் தனியா சினிமாவுக்குப் போனா நல்லாருக்காது. அதனால, சின்னப்பையன் என்னையும் கூட்டிட்டுப் போயிருவாங்க. இப்படி எங்க அத்தைங்க கூட நிறைய படங்கள் பாத்துருக்கேன்.


இதேபோலத்தான் எங்க பாட்டியும். ’பூம்புகார்’ படம் வந்திருக்குன்னு சொன்னவுடனே அவ்வளவுதான். பாட்டிக்கு இருப்பே கொள்ளலை. எந்த பஸ், எந்த ஊர் போவும்னு எல்லாமே தெரியும் பாட்டிக்கு. ‘இது எத்தனாம் நம்பர் பஸ்’னு கேப்பாங்க. ‘ஏழாம் நம்பர் பாட்டி’ன்னு சொல்லுவேன். உடனே அவங்க, ‘இது தியேட்டருக்குப் போவாதுடா’ன்னு தெளிவாச் சொல்லுவாங்க. ’பூம்புகார்’ படத்துல கவுந்தியடிகளா, கே.பி.சுந்தராம்பாள் நடிச்சிருந்த்ததால, எங்க பாட்டிக்கு படம் பாத்தே ஆகணும்னு ஒரு ஆசை.


அதேபோல, எங்க அத்தைங்க கூட, ஜெமினி, கே.ஆர்.விஜயா நடிச்ச, கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோட ‘கற்பகம்’ படம் பாத்தது நினைவிருக்கு. அப்புறம்... நான் என் நண்பர்கள்னு போய் பாத்ததுன்னு ‘ராமு’ படம், நல்லாவே ஞாபகம் இருக்கு. ஜெமினி நடிச்ச படம்.


எங்க வீட்ல ஜெமினி கணேசனுக்கு ஏகப்பட்ட பேர் ரசிகர்கள். அப்பலாம், எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் ஜெமினிக்கும்தான் லேடீஸ் ரசிகர்கள் ஜாஸ்தி. இதுல ஜெமினிக்குன்னு தனி ரசிகர் கூட்டமே இருந்துச்சு. ’கல்யாணப் பரிசு’, ‘கற்பகம்’னு அவரோட படங்களுக்கு நல்ல வரவேற்பு. அப்படித்தான் ‘ராமு’ படத்துக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. வரவேற்பு. கையில ஒரு பையனை புடிச்சிக்கிட்டு, ஒரு ஜோல்னாப் பையோட நிக்கிற போஸ்டரைப் பாத்தே பலரும் ஒருமாதிரி சோகமாயிட்டாங்க.


இந்த ‘ராமு’ படம்தான் ‘முந்தானை முடிச்சு’ படத்துக்கு இன்ஸ்பிரேஷனா இருந்துச்சு. அதாவது... பையனும் ஜோல்னாப் பையுமா ஜெமினி நிக்கிற போஸ்டர்தான் ‘முந்தானை முடிச்சு’ கதை உருவாகறதுக்குக் காரணமா இருந்துச்சு’’


என பால்யத்தையும் பால்யத்தின் போது பார்த்த படங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவை அனைத்தும் அட்டகாசமான திரைக்கதை போல் விரிந்துகொண்டே இருந்தன.

* ’முந்தானை முடிச்சு’க்கு முதலில் பண்ணின கதை வேறு.

* ’சுவரில்லாத சித்திரங்கள்’ டெய்லர் அம்மா நிஜம்

* டெய்லர் காளியண்ணன் டபுள் மீனிங் டயலாக் பின்னுவாரு

இன்னும் பல... சுவாரஸ்யங்களை விவரிக்கிறார் பாக்யராஜ்.

இதன் தொடர்ச்சி... 23.10.19 புதன்கிழமை அன்று வெளியாகும்.

கே.பாக்யராஜின் முழு வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x