

தாராள மனம் கொண்டவர் மற்றும் கனிவானவர் நயன்தாரா என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தி திரையுலகில் ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துப் பிரபலமானவர் கத்ரீனா கைஃப். தற்போது உள்ள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் கத்ரீனா கைஃப் தான் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளார். இதற்கு கே பியூட்டி என்று பெயர் வைத்துள்ளார் கத்ரீனா கைஃப். இது பற்றிய செய்தி அறிக்கையில், "நம்மை எது மகிழ்ச்சியாக்குகிறதோ அதில்தான் அழகு இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன். எனக்கு நினைவு தெரிந்து, ரன்வேயிலிருந்து பெரிய திரை வரை, ஒப்பனை என் பயணத்தில் ஒரு முக்கியப் பங்காக இருக்கிறது. இப்போது அதன் மீது எனக்கிருக்கும் அன்பை கே பியூட்டி, எனது முதல் அழகு சாதன பிராண்ட் மூலமாகக் காட்டியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்த கே பியூட்டி விளம்பரங்களில் கத்ரீனாவுடன் நயன்தாராவும் நடித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அழகான தென்னக சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்குப் பெரிய பெரிய நன்றி. அவரது வேலைப் பளுவுக்கு நடுவில் கே பியூட்டியின் விளம்பரங்களில் பங்கெடுக்க மும்பை வந்திருந்தார்.
தாராள மனம் கொண்டவர், கனிவானவர். என்றும் அவருக்கு நன்றியுடன் இருப்பேன். நாளை முதல் விளம்பரங்கள் வரும். பார்த்துக்கொண்டே இருங்கள்" என்று தெரிவித்துள்ளார் கத்ரீனா.
தற்போது கே பியூட்டி தொடக்கத்துக்காக பல்வேறு திரையுலக நட்சத்திரங்களும் கத்ரீனாவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.