

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க லால் ஒப்பந்தமாகியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சஷிகாந்த் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது.
ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதால், 'அசுரன்' படத்தின் வெற்றியைக் கொண்டாட தனுஷ் சென்னை வரவில்லை. ஒட்டுமொத்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் தான் சென்னை திரும்பவுள்ளது படக்குழு. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு, 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் லண்டனிலேயே நடைபெற்று வருகிறது.
இதற்காக மாரி செல்வராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இருவருமே லண்டனில்தான் இருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், இவர்களுடன் இணைந்து கதை விவாதம், பாடல்கள் உருவாக்கம் ஆகியவற்றைக் கவனித்து வருகிறார் தனுஷ்.
தற்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் லால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்க உள்ளது. இதில் தனுஷுக்கு நாயகியாக மலையாள நடிகை ராஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் படத்துக்கு 'கர்ணன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.