

ஆபாசப் பதிவுகள் குறித்து கண்டனம் தெரிவித்த சேரன், முகமற்றவர்கள் திருந்துவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததால், மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்துள்ளார் இயக்குநர் சேரன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகள் குறித்து பலரும் பாராட்டு தெரிவித்தாலும், கவின் - லாஸ்லியா இருவருக்கும் ஏற்பட்ட காதலில் இவரது நிலைப்பாடு குறித்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வந்தார்கள்.
மேலும், கவின் - லாஸ்லியா இருவரது ரசிகர்களும் தொடர்ச்சியாக இயக்குநர் சேரனைத் திட்டி வந்தார்கள். இதனால் சர்ச்சை உருவானது. இதனைத் தொடர்ந்து இருவரது பெயரும் இனிமேல் என் நாவில் வராது என்று காட்டமாகத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் சேரன்.
இதன் தொடர்ச்சியாகப் பலருமே சேரனைத் திட்டி வந்துள்ளனர். ஆனால், எதற்குமே பதிலளிக்காமல் அமைதி காத்து வந்துள்ளார். தற்போது அவரது ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டு ஆபாசமாகத் திட்டுவதும், புகைப்படங்களைப் பதிவேற்றுவதுமாக இருந்துள்ளனர். இந்தச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "போலி ஐடி உபயோகித்து அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சிதைக்கும் முயற்சியில் அல்லது காயப்படுத்தும் முயற்சியில் இறங்கும் குற்றவாளிகள் இனிமேல் நிறுத்திக்கொள்ளட்டும். மனரீதியாக ஒருவரைப் பாதிக்கவைப்பது என்பது பெரும் குற்றம் என்பதை உணரட்டும்.
பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தும் வலைதளங்களில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் ஆபாசப் படங்களை, வீடியோக்களை இணைக்கும் முகவரியற்ற முகங்களை அரசு சட்டப்படி தண்டிக்க ஆவன செய்யவேண்டும்.
திருந்துவார்களா முகமற்றவர்கள். கட்சித் தலைவர்களின் இத்தனை வருடப் பொதுச்சேவை உழைப்பு மக்களுக்கான பிரச்சினைகளில் முன்னெடுப்பு இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனுதாபிகள் என்ற பெயரில் தரம் தாழ்த்திப் பேசும் நியாயமற்ற செயல்களை, ஆபாசப் பதிவுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். நிறுத்துங்கள் போதும். ஒருவரின் மனதை எந்த வகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.
சமூக வலைதளம் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது. சிலரின் மனதில் காட்டுப் பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். நடிகர்களின் இத்தனை வருட உழைப்பை மதிக்காமல் அவர்களின் முன்னேற்றத்தின் காரணம் அறியாமல் ரசிகர்கள், விமர்சகர் என்ற பெயரில் போலியானவர்கள் ஆபாச வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் பேசுவதைப் பதிவிடுவதை எதிர்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.